Saturday, February 9, 2008

அமெரிக்காவில் த‌மிழ் வ‌ள‌ர்ப்போர் (4)


ந‌ம் த‌மிழ் மொழியை அய‌ல் மண்ணாம் அமெரிக்க மண்ணில் அறிவுசார் ப‌ல்க‌லைக்க‌ழ‌கம் ஒன்று கற்றுக் கொடுக்கிறது. அந்தப் பல்கலைக்கழகம் பெர்க்கிலி பல்கலைக்கழகம். கலிஃபோர்னியாவில் உள்ள இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை அமைக்க முன்னின்று முயற்சி கண்டவர்களுள் கலிபோர்னியாவைச் சேர்ந்த நா.குமார் குமரப்பன் அவர்களும் ஒருவர்.

தமிழகத்தில் B.E., (Electronics & Communication Engineering); அமெரிக்காவில் M.S.(Electrical Engineering) படித்த இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக கலிபோர்னியாவை (சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி) இருப்பிடமாகக் கொண்டு வசித்து வருபவர். ரிக்கோ நிறுவனத்தில் இயக்குனராக (Director of Engineering, Ricoh Corporation.) இருக்கிறார்.

எந்த ஒரு சூழலிலும் மனித நேயத்துடனும், ஆகாயத்தைப் பார்த்து அற வாழ்விற்கு தடம் போட முயலாமல் அக்கம் பக்கத்தின் சமூகப் பிரச்சனைகளில் அக்கரை கொள்கிறவராகத் திகழ்கிறார். இத‌னால் பொதுந‌ல‌ப் பொறுப்புக‌ள் ப‌ல‌ இவ‌ரைத் தேடி வ‌ந்து சேர்ந்து கொண்ட‌து.

1980 - சான் பிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் (San Francisco Bay Area Tamil Manram) நிறுவிய குழுவில் ஒருவர்.

1991 - 1997: UC Berkeley Tamil Chair - நிறுவிய நிதி திரட்டும் குழுவிற்குத் தலைவர்.

2002 - உத்தமம் (INFITT) சார்பாக, சான் பிரான்ஸிஸ்கோவில் நடந்த தமிழ் இணைய மாநாட்டிற்குத் (TI 2002) துணைத் தலைவர்.

உத்தமத்தின் (INFITT) தற்சமய பொருளாளர்.

கலிபோர்னியா தமிழ் கழகத்தின் (CTA - California Tamil Academy)துணைத் தலைவர் - இது கலிபோர்னியா தமிழ் அமெரிக்கர்களின் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்கும் முயற்சி - தற்சமயம் கிட்டத்தட்ட 1000 குழந்தைகள் இங்கு தமிழ் கற்கின்றார்கள்.

ஈழத் தமிழர்களின் துயரில் பங்கு கொண்டு, இங்குள்ள TNC (Tamils of Northern California)அமைப்பின் மூலம் சிறு சிறு முயற்சிகள்

-என்று இவரின் தமிழ் வளர்ப்பு முயற்சிகள் மூலம் உதவ முயலும் இவ‌ரின் மனித நேயம் என்ற தொண்டு க‌ரைகாணா க‌ட‌லாய்த் தொட‌ர்கிற‌து. இனிமை, எளிமை, நேர்மை என்ற‌ ப‌ண்புக‌ளில் மிளிரும் நா.குமார் குமரப்பன் அவ‌ர்க‌ளின் மின்காண‌லில் புகுவோமா?

? த‌மிழ‌க‌த்திலிருந்து இங்கு வ‌ந்த‌ ப‌ல‌ர் த‌ம் தாய்மொழியைத் தொலைத்து, த‌மிழ‌ர்க‌ளோடு த‌மிழில் பேசாமல் ஆங்கில‌த்தில் உரையாடுகிறார்களே? இது குறித்துத் த‌ங்க‌ள் க‌ருத்து என்ன‌?

இதற்குரிய பதில் சற்று சிக்கலானது. ஆங்கில அறிவு இன்றைய நடைமுறைக்கு இன்றியமையாததாக ஆகிவிட்டது என்பது உண்மை. இருப்பினும் தமிழகத்திலேயே வாழும், ஆங்கிலம் அவ்வளவு தேவையில்லாத , சராசரி தமிழன் கூட தம் ஆங்கில அறிவை வெகுவாக வளர்த்துக் கொள்ள ஆசைப்பட்டு ஆங்கிலத்திலேயே பேச முயற்சிக்கின்றான். இங்குள்ளவர்களுக்கு வேலையிலும் மற்ற பல சூழல்களிலும் தமிழ் இல்லாததால், சிலருக்கு பல வருடங்களில், தமிழிலேயே பேசுவது கடினமாகிப் போகின்றது. மற்றும் பலருக்கோ ஆங்கிலத்தில் உரையாடுவது ஒரு வரட்டு கௌரவமாகி விட்டது. மொத்தத்தில் பல தமிழ்ச் சொற்கள் வழக்கொழிந்து போய் வேற்று மொழிச் சொற்கள் உபயோகிப்பது இயல்பாகிக் கொண்டிருப்பது நிதர்சனம். இந்த சாபக்கேடு தமிழ் மொழிக்கு மட்டுமே என்று கூற முடியாது. இருப்பினும் நம் சமூகத்தில் இது சற்று அதிகம் என்றே எண்ணத் தோன்றுகின்றது .

இந்த போக்கை மாற்ற நம் சமூகத்தில் செல்வாக்கு உடையவர்களுக்கும், நம் வெகுசன ஊடகங்களுக்கும், இங்கே ஒரு பொறுப்பு உண்டு. ஆனால் அவர்களோ பொல்லாத சில பேர்க்கு இது நாகரீகம், புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்' என்ற கவிஞனின் வாக்கை மெய்பிப்பது போல், தம் நடைமுறைகளை மேற்கொள்கின்றார்கள். அதாவது தமக்கே உரித்தான செல்வாக்கைப் பயன்படுத்தி இந்தச் சாய்வினை நிறுத்த / மாற்ற முயற்சிக்காமல் அதை வலுப்படுத்தவே முனைகின்றார்கள். இந்த வலையில் விழாமல், தமிழனின் மனப்போக்கு மாற வேண்டுமென்றால் தமிழன் பொருளாதரத்தில் இன்னும் பல படிகள் முன்னேற வேண்டும். தனது மொழி மீதும், இனத்தின் மீதும் நியாயமான பற்றுக் கொண்டு பெருமிதத்தோடு வாழ நம் மொத்த சமூகத்தின் பொருளாதர மேன்மை பெரிதும் உதவும் என்றே நம்புகின்றேன்.

? சான்பிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் நீங்க‌ள் த‌மிழ் ச‌ங்க‌ம் அமைக்க‌ தூண்டுத‌லாயிருந்த‌து எது?

மொழி, எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள மட்டுமே உண்டாக்கப்பட்ட ஒரு கருவி அல்ல. நம் கலாச்சாரமும், வரலாறும், தற்சமய வாழ்க்கை முறைகளும், நம் மொழியில் அது தரும் அறிவில் புதைந்து கிடக்கின்றன. நம் மொழியைச் சுற்றியுள்ள ஒரு சூழல்தான் எனக்கு இயல்பானதாகத் தெரிகின்றது, இதமான ஒரு நிறைவைத் தருகின்றது. அடிப்படைத் தேவைகளுக்குப் பிறகு என் மனம் தேடியது இந்த சூழலைத்தான். புலம் பெயர்ந்து வாழ வந்த இந்தப் பகுதியிலும் இந்தச் சூழலை உண்டாக்கத் தேவையான முக்கியாமான தளமாக நான் கருதியது ஒரு உள்ளூர் தமிழ்ச் சங்கத்தைத்தான். மேலும் தமிழனுக்கு ஆண்டாண்டு காலமாகத் தமிழ்ச் சங்கம் தொடங்கும் பாரம்பரியமுண்டு. வளமான நம் மொழியும், கலாச்சாரமும் தொலைந்து விடாமலிருக்க, அது பெருக, பழந்தமிழன் இந்த 'தமிழ்ச் சங்கம்' என்னும் தளத்தை பேணி வளர்த்து, பாதுகாத்து போற்றியிருக்கின்றான். இந்த தாக்கமும் என்னிடம் இயல்பாக இருந்திருக்க வேண்டும்.

நம் முப்பாட்டனும், பாட்டனும் வளர்த்து பராமரித்து நம்மிடம் ஒப்படைத்து விட்டுப் போன நம் மொழியை, கலாச்சாரத்தை நாமும் நம் சந்ததியரிடம் முறையே சேர்க்க வேண்டும் என்ற பொறுப்புணர்வும் உண்டு. இதற்கெல்லாம் ஒரு வடிவம் கொடுப்பதுதான் 'தமிழ்ச் சங்கம்' என்னும் தளங்கள். இந்த தாக்கங்களுடன்தான், ஒத்த கருத்துடைய சில நண்பர்கள் ஒன்றாக இணைந்து 1980-ல் 'சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் ' என்ற தமிழ் மன்றத்தைத் தொடங்கினோம். இத்தமிழ் மன்றத்தின் இன்றைய இணையத் தள முகவரி: http://www.bayareatamilmanram.org

? நீங்க‌ள் த‌மிழ் ச‌ங்க‌ நிர்வாகியாக‌ இருந்த‌கால‌த்தில், த‌மிழ் வ‌ள‌ர்ச்சிக்கு‌ நீங்க‌ள் முன்னெடுத்த‌‌ முய‌ல்வுக‌ள் குறித்துச் சொல்லுங்க‌ளேன்?

நான் சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் முதல் நிர்வாகக் குழுவின் பொருளாளராக இருந்தேன். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தொடங்கும் தமிழ்ச் சங்கங்க‌ளை ஒருங்கிணைத்து நடத்தும் வாடிக்கையான நிகழ்ச்சிகளை எங்கள் தமிழ் மன்றமும் நடத்தியது. அத்துடன் நின்றுவிடாமல் ஓரிரு வேறுபட்ட முயற்சிகளையும் மேற்கொண்டோம் . தமிழர்கள் கூடிட ஒரு தளம் அமைத்துக் கொடுப்பது, தமிழர் பண்டிகைகள் கொண்டாடுவது, தமிழ்த் திரைப்படங்கள் திரையிடுவது என்பன சில முயற்சிகள். இம்முயற்சிகள் தமிழ் மன்றங்களின் வாடிக்கையான செயல்களே. இது தவிர சில வேறுபட்ட முயற்சிகளையும் மேற்கொண்டோம். இதற்கு அதிக உந்துதலும், நேரமும், முயல்வும் தேவையாகயிருந்தது. இந்த வேறுபட்ட முயற்சிகள் வருமாறு:

அ) இலக்கிய கூட்டங்கள் இல்லையில்லை இதைக் கலந்துரையாடல் என்றே சொல்லவேண்டும். எங்கள் மத்தியில் யாரும் பேராசிரியர்களோ , இலக்கிய வல்லுனர்களோ இல்லை. இருந்தும் ஆர்வலர்கள் சிலர், தமக்குப் பிடித்த தமிழ் இலக்கியத்தை எடுத்துக் கொண்டு, அதை விரித்துக் கூறி, கூடியிருந்தவர்களுக்கு அவ்விலக்கிய நூலில் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்த முயல்வது.

ஆ) எங்களில் சிலரிடம் தமிழ் நூல்கள் ஓர் அளவிற்கு சேர்ந்திருந்தன. இதையெல்லாம் ஒன்று திரட்டி, சிறிய நடமாடும் நூலகம் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி, தமிழ் ஆர்வமுள்ளவர்களுக்கு சுழல்முறையில் தமிழ் நூல்கள் கொடுத்து வாங்க ஏதுவாக இருக்க வழி செய்தோம். சிலருக்கு தமிழ் நூல்களில் ஆர்வத்தை ஏற்படுத்தவும் முயன்றோம்.

இ) சிறுவர்கள் தமிழ் கற்க தமிழ் வகுப்புகளை வடிவமைத்து நடத்தி வந்தோம்.

ஈ) கணினியில் தமிழ் தட்ட‌ச்சடிக்க வசதிகள் இல்லாத காலம். தமிழிலலேயே அறிக்கைகள் வெளியிட, ஆவணங்கள் உருவாக்க, தமிழகத்திலிருந்து தமிழ் தட்டச்சு இயந்திரம் ஒன்றை வாங்கி இங்கு வரவழைத்துப் பயன்படுத்தினோம்.

உ) சில தமிழ் நாடகங்கள் மேடையேற்றினோம்.

? ச‌மூக‌ப் பிர‌ச்னைக‌ளில் அக்க‌றையோடு ஈடுப‌டும் தாங்கள், குறிப்பிடும்ப‌டியான‌ பிர‌ச்னைக‌ளில் ஈடுப‌ட்டு அதில் வெற்றிகிட்டிய‌ நிக‌ழ்வுக‌ள் குறித்துச் சொல்ல‌ இய‌லுமா?

சமூக அக்கறையினால் அதன் பிரச்சனைகளில் ஈடுபாடு கொண்டு, அதை எதிர்த்து வன்மையாகப் போராடி, அதற்கு ஒரு தீர்வு கண்டு , அதில் மன நிறைவு கொண்ட அனுபவங்கள் எனக்கு உண்டு என்று கூற முடியாது. நம் சமூகத்தின் பல பிரச்சனைகள் இன்றும் தொடரும் பிரச்சனைகள்தான்.

தமிழகத்தில் காணும் ஏழ்மை, அதனால் ஏற்படும் கொடுமைகள், இதனால் அடிபட்டுப் போகும் மனித நேயம், இவை யாவும் சமூக அக்கறை கொண்ட எவரையும் உறுத்தத்தான் செய்யும். நம்மால் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு சிறு உதவிகளைத்தான் தமிழகத்திலுள்ள தொண்டு நிறுவனங்களின் மூலம் செய்ய முடிகின்றது. குறிப்பாக அனாதை / ஏழைக் குழந்தைகளின் அவலங்கள் ஒரு பெருங்குறையே. இதில் அடங்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆயிரமாயிரம் இருக்க, எங்களால் முடிந்த ஒரே ஒரு பெண் குழந்தையை மட்டும் தத்தெடுத்து எங்கள் மகளாக இங்கு வளர்க்கின்றோம் . இது பெரும் மனநிறைவைத் தருகின்றது. அதற்கும் மேலும் எங்கள் மகளின் செய்கைகள் தரும் இன்பங்கள் எங்கள் வாழ்வில் மிக முக்கியமானவை.

மூட நம்பிக்கைளில் ஊறிப் போனது நம் சமூகம். ஆழமான ஆன்மீகத்திற்கும், ஆடம்பரமான சடங்குகளுக்கும் வேறுபாடு தெரியாமல் வெத்துக் கூத்துகளில் மூழ்கியிருப்போர் அநேகர். இவர்களை மாற்ற பல தலைமுறைகள் தேவை என்றே தோன்றுகின்றது. நான் முயற்சிப்பதோ என்னை சுற்றியுள்ள நண்பர்களும் சொந்தங்களும் இந்த வலையில் சிக்காமல் இருக்கத் தேவையான ஈடுபாடே. இதுவே எனக்கு ஒரு சவால்தான்.

நியாயமான மொழிப்பற்றும் இனப்பற்றும் அற்று நம் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் தொலைத்துக் கொண்டு வருபவர்கள் பெரும்பான்மையானோர். இதுவும் என் கண்ணோட்டத்தில் நம் சமூகப் பிரச்சனையே. ஆயினும் என்னால் முடிந்தது என்னைச் சுற்றியுள்ள, குறுகிய சிலரிடம் மட்டுமே ஒரு விழிப்புணர்வை, மாற்றத்தை உண்டு பண்ண முடிகின்றது. ஆக இது போல் பலவும் தொடரும் பிரச்சனைகளே.

நாம் முனைப்போடு நம் தகுதிக்கேற்ப முயன்றாலும், தீர்வுகள் அவ்வளவு எளிதாகத் தென்படுவதில்லை. நாமும் நம் முயற்சிகளில் குறை வைப்பதில்லை. நம் கடமையைச் செய்து கொண்டுதான் இருக்கின்றோம் என்ற தெளிவு உண்டு.

? த‌மிழ் குழந்தைகளுக்கு தமிழ் க‌ற்றுக் கொடுக்க‌ வேண்டும் என்ற‌ எண்ண‌ம் ஏற்ப‌ட்ட‌ போது அதைச் செய‌ல்ப‌டுத்த‌ எண்ணிய‌ உங்க‌ளுக்கு ஏற்ப‌ட்ட ஆதர‌வின்மை, தோள் கொடுத்த‌ ச‌க‌ ந‌ண்ப‌ர்க‌ள் என்ற‌ இருவேறு நிலைக‌ளில் உங்க‌ள் ம‌ன‌நிலை எப்ப‌டி இருந்த‌து?

1980 களில் சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் மூலமே முதல் முதலாகத் தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதை செயல்படுத்த முயற்சிக்கப்பட்டது. தமிழ் கற்பிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடங்கிய ஓரிரு ஆண்டுகளிலேயே முக்கியமான சில கருத்து வேறுபாடுகளும் தோன்ற ஆரம்பித்தன. இந்தக் கருத்து வேறுபாடுகள் தமிழ் மன்றத்தின் புது உறுப்பினர்களிடமிருந்துதான் வர ஆரம்பித்தது. தமிழ் மட்டும் கற்றுத் தருவது போதாது, நம் கலாச்சாரத்தையும் நம் பிள்ளைகளுக்குப் புகட்ட வேண்டும். நம் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அம்சம் தெய்வ வழிபாடு. அதற்கு உகந்த சம்ஸ்கிருத சுலோகங்களும் சொல்லித் தர வேண்டும் என்று ஒரு சாரர் பிடிவாதம் பிடிக்க மேலும், தமிழ் பயில வருபவர்களின் எண்ணிக்கையும் ஒரு பெரிய அளவில் இல்லாததால், தமிழ் கற்பிக்கும் முயற்சிகள் 80-களில் பிசுபிசுத்துப் போய் விட்டது. பிறகு தமிழ் மன்றத்தின் மூலம் தமிழ் கற்பிக்கும் முயற்சியே காணாமல் போய்விட்டது . இது வருத்தத்திற்கு உரிய ஒரு விடயம்தான். பல ஆண்டுகள் கழித்து , தமிழ் மன்றம் மூலம் இல்லாமல், தனியார் முயற்சிகளால், மீண்டும் தமிழ் கற்பிக்கும் படலம் துளிர் விட ஆரம்பித்தது.

? பெர்க்கிலி ப‌ல்க‌லை த‌மிழ் இருக்கையில் த‌ங்க‌ள் ப‌ங்க‌ளிப்பில் மன நிறைவு அடைந்த நிகழ்வு குறித்து...?

பெர்க்கிலி பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை சராசரி அமெரிக்கத் தமிழர்களின் முயற்சியால் சாத்தியமானது. 1991ல் ஆரம்பமான இம்முயற்சி 1997ல் தமிழ் இருக்கையை நிறுவிய பின்னரே நிறைவு பெற்றது. இந்த இருக்கை அமைக்கத் தேவையான நிதி திரட்டும் குழுவிற்கு நான் தலைமை தாங்கினேன். இந்தத்தமிழ் இருக்கை இன்று பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது . பல தமிழ் அமெரிக்கர்களின் பிள்ளைகள் பெர்க்கிலியில் தமிழ் கற்க உதவியாக உள்ளது. மேலும் , வட அமெரிக்காவில் தமிழ் இலக்கியத்தில் ஆராய்ச்சி செய்வோருக்கு இது ஒரு அரிய வாய்ப்பைத் தருகின்றது . "Tamil is one of the best kept secrets. தமிழ் ஆராய்ச்சிகளை தமிழர்களே தமிழில் செய்து வருவாதால்தான் தமிழின் பெருமை உலகத்தின் கண்களுக்குத் தெரிவதில்லை", என்ற கருத்து தமிழ் இருக்கையின் தலைவரான பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் எங்களிடம் பகிர்ந்து கொண்ட ஒன்று. அதை நிவர்த்தி செய்வது போல், நாம் மேற்கத்தியர்களிடமும் உலக அறிஞர்களிடமும் நாம் தமிழைக் கொண்டு செல்ல , பெர்க்கிலி தமிழ் இருக்கை ஒரு நல்ல அடித்தளம் . பெர்க்கிலி தமிழ் இருக்கையில் ஆராய்ச்சி மாணவர்களாக இருந்த சிலரே இன்று மற்ற அமெரிக்கப் பல்கலைக் கழகங்களின் தெற்கு ஆசிய மையங்களில் ஆராய்ச்சி / ஆசிரியர்களாக இருப்பதே இதற்கு நல்ல சான்று. இதுவே நம் உழைப்பின் பயன். மற்றும் தமிழ் இருக்கை இங்கு பெர்க்கிலிக்குத் தமிழ்ப் பேராசிரியர்களையும் அறிஞர்களையும் அழைத்து வந்த பொழுது, சான்பிரான்சிஸ்கோ வாழ் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுடன் 'Fireside Chats' என்ற தொடரின் மூலம் தமிழ் சார்ந்த தலைப்புகளில் அவர்கள் சுவையான கலந்துரையாடலில் பங்கு கொண்டது அறிவு சார்ந்த மனதை விரிவாக்கும் அனுபவம்.

? உத்த‌ம‌ம் குறித்தும் அதில் உங்க‌ள் ஈடுபாடு குறித்தும் உத்த‌ம‌த்தின் சாத‌னையாக‌ நீங்கள் க‌ருதுவ‌து குறித்தும் ப‌கிர்ந்து கொள்ளுங்க‌ளேன்?

தமிழ், இலக்கியத்தில் மட்டும் அல்லாமல் அறிவு சார்ந்த துறைகளிலும், தற்கால ஊடகங்களிலும், கணினியிலும், இணையத் தளங்களிலும், சிக்கலின்றி வளம் பெற்று பெருகுவதற்கான தடத்தை, தளத்தை, தமிழர்களாகிய நாம் தமிழுக்கு அமைக்க வேண்டும். அந்தப் பின்னனியில் உருவானதே உத்தமம். உத்தமம் (உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம். INFITT - International Forum for Information Technology in Tamil) என்பது தமிழில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பெருக்க, தமிழ் தொழில்நுட்ப அறிஞர்கள் ஒன்று கூடி ஆலோசித்து அலச ஏற்பட்ட ஒரு அமைப்பு. உத்தமம், இங்கு அமெரிக்காவில் கலிபோர்னியாவில் பதிவு செய்யப்பட்ட வர்த்தக / இலாப நோக்கு இல்லாத ஒரு அமைப்பு . தற்சமயம் இவ்வமைப்பிற்கு நான் பொருளாளராக உள்ளேன்.

உத்தமம் பற்றி அறிந்து, அதன் உள் நடைமுறைகளை அறியாதவர்கள், இந்த அமைப்பிடம் அநேக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்ததால் உத்தமம் தமிழ் தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான திட்டங்கள் ஒன்றையும் வழி நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைக்கக்கூடும். ஒரு கோணத்தின் பார்வையில் அதில் உண்மையிருக்கலாம். ஆயினும், உத்தமம், எதையும் நடைமுறைப் படுத்துவதற்கான அதிகாரம் வாய்ந்த ஒரு அமைப்பு அல்ல. மேலும் எழுத்துருவிற்கான தரவு போன்ற விவாதங்களில், பல தரப்பட்ட பிரிவுகளிலிருந்து வந்த, மாற்றுக் கருத்துக்களுக்கு இணக்கம் காட்டாத கடுமையான நிலைகளுக்கு நடுவில், உத்தமம் செயலிழந்து நின்றது என்பது உண்மை. கடந்த இரண்டு ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த இந்த அமைப்பு இப்போது மீண்டும் ஊக்கத்துடன் செயல்பட முயற்சிக்கின்றது.

தமிழ்த் தகவல் தொழில்நுட்பம் முன்னேற, பன்னாட்டு முகத்துடன் கூடிய ஒரு அமைப்பு பெரும் உதவியாகயிருக்கும் என்றே நம்புகின்றேன். அந்தவிதத்தில் உத்தமம் தமிழ்த் தகவல் தொழில்நுட்பத்திற்கு ஒரு அடையாளத்தைத் தரத்தான் செய்தது. பன்னாட்டு நிறுவனங்களும் ( உம்: Microsoft, Oracle), பன்னாட்டு தரவு சார்ந்த அமைப்புகளும் (உம் : Unicode Consortium) உத்தமத்துடன் ஒரு உறவை ஏற்படுத்திக் கொண்டன . இவை உத்தமத்தின் தேவையை, அது போன்ற அமைப்பிற்கு ஏற்படக்கூடிய உள்ளார்ந்த சக்தியை கோடிட்டுக் காட்டுகின்றது. ஆக இந்த அமைப்பு வலுவாக வளர வேண்டும். இந்த அமைப்பை செயல் திறனுள்ள ஒரு அமைப்பாக நடத்தி, இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, தமிழ் தொழில்நுட்ப வல்லுனர்கள், ஆர்வலர்கள் இந்த அமைப்பின் அங்கத்தினர்களாகச் சேர வேண்டும் என்பதே என் அவா. உத்தமத்தின் இணையத்தள முகவரி: www.infitt.org

? இன்று அமெரிக்காவில் 1000 குழ‌ந்தைக‌ளுக்கு மேல் த‌மிழ் க‌ற்றுக் கொள்கின்ற‌ நிலையை உருவாக்க‌ அடித்த‌ள‌மிட்ட‌வ‌ர்க‌ளுள் முத‌ன்மையான‌வ‌ர் நீங்கள். இந்தத் த‌மிழ் ப‌ள்ளி நிர்வாக‌ம், பாட‌த்திட்ட‌ம், த‌மிழ் க‌ற்றுக் கொடுக்கும் த‌ன்னார்வ‌ல‌ர்க‌ள் குறித்து வாச‌க‌ர்க‌ளோடு ப‌கிர்ந்து கொள்ளுங்க‌ளேன்?

நான் தமிழ் வளர்ப்புக்காகப் பங்கு பெற்ற முயற்சிகளுள் இதை எதிர்பார்ப்பிற்கு மேலாக வெற்றி பெற்ற முயற்சி என்று கூற வேண்டும். சான்பிரான்சிஸ்கோ வாழ் தமிழ் அமெரிக்கர்களின் இளைய தலைமுறைக்குத் தமிழ் கற்பித்து அவர்களுக்குள் தமிழன் என்ற அடையாளத்தையும் உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அது இன்று CTA (Calfornia Tamil Academy கலிபோர்னியா தமிழ்க் கழகம் - www.catamilacademy.org ) என்ற வடிவத்தின் மூலம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 1990-களின் பிற்பகுதியில் நாங்கள் நான்கு நண்பர்கள் இணைந்து, தமிழ் அறக்கட்டளை (TNF - Tamil Nadu Foundation) என்ற அமைப்பின் கீழ் இங்கு சான்பிரான்சிஸ்கோ பகுதியில், பிரீமாண்ட் (Fremont) என்னும் புறநகர்ப் பகுதியில் தமிழ் கற்றுக் கொடுக்க முயன்றோம். பல நடைமுறைச் சிக்கல்களால் அம்முயற்சி ஒரு வருடத்திற்குப் பிறகு தொடரவில்லை. ஆனாலும் மனம் தளராமல் இந்த நால்வரில் ஒருவரான திருமதி.செல்வி இராசமாணிக்கம், தமிழ் அறக்கட்டளையுடன் தொடர்பேதுமில்லாமல், தனியாகவே இங்கு கூப்பர்டினோ (Cupertino) என்னும் புறநகரில் , CTA என்னும் பெயரிட்டு தம் முயற்சிகளைத் தொடர்ந்தார். பிறகு நானும் அதில் இணைந்து பிரீமாண்டிலும் CTA கிளை ஒன்றை நடத்த ஆரம்பித்தோம். இன்று CTA விற்கு ஐந்து கிளைகளுண்டு. இதில் கிட்டத்தட்ட 1080 மாணவர்கள் தமிழ் கற்கின்றார்கள். ஐந்து கிளைகளும் ஒரே மாதிரியாக எங்கள் நிர்வாகக் குழுவின் கண்காணிப்பில் நிர்வாகிக்கப் படுகின்றது. தற்சமயம் ஐந்து கிளைகளின் முதல்வர்களையும் சேர்த்து மொத்தம் 10 பேர் நிர்வாகக் குழுவில் இருக்கின்றோம்.

தமிழ்ப்பள்ளி, செப்டம்பரிலிருந்து மே மாதக் கடைசி வரை ஞாயிறு தோறும் ஒன்றரை மணி நேரத்திற்கு நடைபெறுகின்றது . ஞாயிறு காலை மட்டும் இங்குள்ள பள்ளியையோ, கல்லூரியின் வசதிகளையோ வாடகைக்கு எடுத்து வகுப்புகளை நடத்துகின்றோம். வகுப்புகளிலும் மழலை-1 ல் (PreSchool-1) ஆரம்பித்து 7 ஆம் வகுப்பு (Grade 7) வரை மொத்தம் பன்னிரண்டு வகுப்புகள் உள்ளன. மூன்று வயதிலிருந்து (பெற்றோரை விட்டு வகுப்பில் தனியாக அமரவேண்டும், potty-trained இருக்க வேண்டும் ) பதினான்கு வயது வரையுள்ள மாணவர்கள் உண்டு. ஒவ்வொரு வகுப்பிலும் சொல்லித் தரப்படும் மேலெழுந்தவாரியான உள்ளடக்கம் எங்கள் வலைத்தளத்தில், skillset என்னும் ஆவணத்தில் காணலாம்.

முதல் ஐந்து வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களை எங்கள் CTA பாடத்திட்ட குழுவே வடிவமைத்து, இங்கு அமேரிக்க வாழ் சூழலிற்கு ஏற்ப உருவாக்கினார்கள். பிறகு சென்னையில் ஒரு தமிழாசிரியர் குழுவின் எழுத்துக்களின் மூலம் அது நடைமுறைப் படுத்தப்பட்டது. இந்த புத்தகங்களுடன் சேர்த்து அந்த வகுப்பிற்கான ஒளி,ஒலி குறுந்தகடொன்றும் (DVD) உண்டு. இது மாணவர்கள் கற்க எளிதாக, பயனுள்ளதாக உள்ளது என்பது எங்கள் கணிப்பு. பிற்பட்ட ஏழு வகுப்புக்களுக்கும் நாங்கள் தமிழக அரசின் புத்தகங்களையே உபயோகிக்கின்றோம். ஆனால் பிற்பட்ட வகுப்புகளுக்கு அதிக மாணவர்கள் வருவதில்லை. ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒவ்வொரு நாளும் என்ன சொல்லித் தரவேண்டும் என்ற விவரமான, ஆழமான பாடத் திட்டத்தை எங்கள் பாடத் திட்டக்குழு மூலம் வகுத்து வைத்திருக்கின்றோம். அதை அந்தந்த ஆசிரியர்களிடம் கொடுத்து விடுவோம். ஆசிரியர்கள் அல்லாத ஆசிரியர் பயிற்சி பெறாத, ஆர்வலர்களே பகுதி நேர ஆசிரியர்களாக மாறிப் பணியாற்றுகின்றனர். எங்கள் சூழலிற்கு இது மிகவும் பொருந்துகின்றது . ஒரு ஆசிரியரின் கீழ் அதிக பட்சம் மாணவர்கள் எட்டு என்பதே எங்கள் வரையறை. இதன்படி எங்கள் பள்ளியில் கிட்டத்தட்ட 150 பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளனர். வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும் இப்பள்ளி பல ஆர்வலர்களின் உழைப்பில், ஆர்வத்தில், முயற்சியில் நடக்கின்றது . ஐந்து கிளைகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 175 ஆர்வலர்களுக்கு மேலுண்டு. நல்லதொரு நடப்பிற்காக, ஊர் கூடி தேர் இழுக்கின்றோம். இது மனதிற்கு நிறைவான ஒரு அனுபவம்.

? மேற்கத்தியர்களிடமும் உலக அறிஞர்களிடமும் நாம் தமிழைக் கொண்டு செல்ல, பெர்க்கிலி தமிழ் இருக்கை ஒரு நல்ல அடித்தளம், என்றீர்கள். தமிழ் இலக்கிய ஆராய்ச்சியிலோ , கட்டுரை வடிவிலோ, புத்தக வெளியீட்டிலோ தமிழ் இருக்கை மூலம் நிகழ்ந்தவை குறித்து, குறிப்பிடத்தக்க வகையில் செய்யப்பட்ட முயற்சிகள் குறித்து கருத்துச் சொல்ல முடியுமா?

அ) முதலில் பெர்க்கிலி போன்றதொரு உலக அங்கீகாரம் பெற்ற, உலக அறிஞர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு கல்வி மையத்தில் தமிழ்ப் பீடம் இருப்பது, தமிழை வெளிநாட்டு அறிஞர்களுக்கு அடையாளம் காட்ட உதவுகின்றது.

ஆ) தமிழ்ப் பீடம் வருடா வருடம் ஏப்ரல்-மே மாதம் போல் தமிழ் சார்ந்த தலைப்புகள் கொண்டு ஒரு குறு மாநாடு ஒன்று நடத்துகின்றது. இதற்கு மொழி இயல் அறிஞர்கள் பலர் வருகை தருகின்றனர். எடுத்துக்காட்டாக கடந்த மூன்று ஆண்டாக சோணாடு (சோழ நாடு), (தமிழகக் ) கோவில்கள், (பண்பாட்டுப்) பாலம் என்னும் தலைப்புகளில் தமிழ்ப் பீடம் குறு மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இம்மாநாடுகளில் பல அறிஞர்கள் தம் ஆராய்ச்சியில் கண்டறிந்த விபரங்களையும், ஆராய்ச்சி ஆவணங்களையும் பகிர்ந்து கொள்ளுகின்றனர். இது ஆராய்ச்சியாளர்களின் ஆர்வம் குன்றிவிடாமல் அதை ஊக்குவித்து வளர்த்து விடுகின்றது. பேராசிரியர் ஹார்ட் புறநானூறை ஆங்கிலத்தில் "The four hundred songs of War and Wisdom" என்று மொழிபெயர்த்து புத்தக வடிவில் வெளியிட்டுள்ளார். இப்பொழுது அகநானூறை மொழிபெயர்த்துக் கொண்டுள்ளார். இதற்கெல்லாம் பெர்க்கிலி தமிழ் பீடச் சூழல் ஒரு உந்து சக்தி என்றே எண்ணுகின்றேன்.

இ) பேராசிரியர் ஹார்ட்டின் எண்ணம், இங்கு தமிழ்ப் பீடத்தில் தமிழ் அறிவு கொண்ட மொழி வல்லுனர்களை உருவாக்கினால், அவர்கள் ஆராய்ச்சியாளர்களாகவோ, ஆசிரியர்களாகவோ மற்ற பல்கலைக் கழகங்களுக்கும் ஆராய்ச்சி மையங்களுக்கும் செல்லும் பொழுது மற்ற இடங்களிலும் தமிழின் தாக்கம் தென்படும் என்பதே. அதாவது "Train the Trainers". அவர் கூற்றின்படி இந்தக் கண்ணோட்டத்திலும் தமிழ்ப் பீடம் வெற்றிகரமாகவே செயல்படுகின்றது. மேற்கூறிய செயல்பாடுகளால் தமிழ்ப் பீடம் தமிழ் மொழி வளத்தை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுகின்றது என்றே எண்ணத் தோன்றுகின்றது. ஆயினும் இவை மட்டும் போதாது. செம்மொழி ஆக்கப் பட்டிருக்கும் தமிழுக்கான நடுவன் அரசின், தமிழக அரசின் திட்டங்களில், வெளிநாட்டு மையங்களுக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் தமிழைக் கொண்டு செல்ல உதவ வேண்டும்.

? உத்தமம், எதையும் நடைமுறைப் படுத்துவதற்கான அதிகாரம் வாய்ந்த ஒரு அமைப்பு அல்ல என்றாலும் எழுத்துருவிற்கான தரவு போன்ற தன் பரிந்துரையை இந்திய நடுவனரசுக்கு அல்லது Unicode Consortium போன்றவற்றிற்குத் தெரிவித்து இதுதான் உத்தமத்தின் நிலைப்பாடு என்று சொல்லப்பட்டதா?

உத்தமம் நடுவன் அரசுடன் எந்த முக்கிய தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. தமிழக அரசின் மூலமாக நடுவன் அரசை அணுகுவது ஒரு நியாயமான எதிர்பார்ப்பே. உத்தமத்திற்கு தமிழக அரசின் அதிகாரிகளுடன் தொடர்பு இருக்கத்தான் செய்தது. 1999-ல் சென்னையில் நடந்த இணைய மாநாட்டின் தொடக்கத்தில் இருந்தே, அதாவது உத்தமம் என்ற அமைப்பு அதிகாரபூர்வமாக உண்டாவதற்கு முன்பே, இந்தத் தொடர்பு இருந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அநேகர்தான் பிறகு 'உத்தமம்' என்ற அமைப்பை சிங்கையின் பொருளாதார ஆதரவில் ஆரம்பித்தவர்கள். ஆகவே தமிழக அரசின் தொடர்பும் ஆதரவும் உத்தமத்திற்கு தொடர்ந்து இருந்து வந்தது. சென்னை மாநாட்டில் அன்று இணையத்தில் அதிகமாக அறியப்பட்டு உபயோகிக்கப்பட்ட "TSCII" எழுத்துருவிற்கும் சென்னையின் சார்பில் முன் வைக்கப்பட்ட எழுத்துரு தரவிற்கும் இடையில் ஒரு திடமான தெளிவான முடிவைத் தேர்ந்தெடுக்க முடியாமல் ஒரு குழப்பமான முடிவே எடுக்கப்பட்டது என்பது என் எண்ணம். அப்பொழுது தொடங்கிய எழுத்துருவிற்கான விவாதம், உத்தமத்திலும் தொடர்ந்து இன்னும் முடிந்தபாடில்லை. விவாதத்தில் தவறில்லை. ஆனால் அதுவே ஒரு பிளவாகி, மற்ற முயற்சிகளையும், மற்றவர் கண்ணில் உத்தமத்தின் செயல்பாட்டிலும் நம்பிக்கையுறச் செய்துவிட்டது என்பது என் தாழ்மையான கருத்து.

Unicode Consortium (ஒருங்குறிச் சேர்த்தியம்) -த்தின் விவாதக் கூட்டங்களில் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு மேற்கத்திய நபர் உத்தமத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். ஆனால் அந்த பிரதிநிதித்துவம் சரியான அணுகுமுறையல்ல என்ற வலுவான எண்ணம் கொண்டவர்களும் உத்தமத்தில் இருக்கத்தான் செய்தார்கள் . இதைத் தவிர்த்து உத்தமம் இல்லாமல் தமிழக அரசும் "Unicode Consortium"த்தில் நேரடி பங்குபெற்று இந்த ஒருங்குறித் (UNICODE) தரவிற்கான விவாதத்தை நல்வழியில் நடத்தியிருக்க வேண்டும். 1990களின் கடைசியில் "Unicode Consortium" கூட்டத்திற்காக இங்கு (San Jose, Ca) வந்த தமிழக அரசின் அதிகாரிகளை அறிவேன். அவர்கள் செவிக்கு மட்டும் வேலை கொடுத்து, மற்று எந்த மாற்றுத் தரவுகளையும் முன் வைக்கவில்லை. காலம் கடந்து இந்த முயற்சிகள் தொடருகின்றன. ஆக, இந்த எழுத்துரு விவாதம் இன்றும் தொடர்ந்து, ஒரு பிளவாகி, மற்ற முயற்சிகளையும் பாதிக்கின்றது என்பது என் எண்ணம். இது வருத்தத்திற்கு உரியதுதான் .

? உத்தமத்தின் செயல்பாட்டில் நம்பிக்கையும், தொழில்நுட்ப உலகத்தின் எதிர்கால வழிகாட்டி என்ற எண்ணத்தையும் ஏற்படுத்த வேண்டும் இல்லையா? அப்போதுதானே உத்தமத்தை செயல்திறனுள்ள ஒரு அமைப்பாக எண்ணி தமிழ் தொழில்நுட்ப வல்லுனர்கள், ஆர்வலர்கள் இந்த அமைப்பின் அங்கத்தினர்களாகச் சேருவார்கள்...

நீங்கள் கூறுவதில் உண்மையுண்டு. பத்துத் தமிழர்கள் சேர்ந்தால் பன்னிரண்டு கருத்துக்கள் தோன்றுகின்றன என்று பலர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இதே கருத்தை எனது ஐரிஷ் நண்பனுடன் அவன் சமூகத்தை பற்றி சொல்லக் கேட்டிருக்கின்றேன். ஆக இது ஓரளவு இயற்கையே என்று தோன்றுகின்றது. ஆனால் நம் சமூக நலனை முன்னிட்டு, வெவ்வேறு கருத்துக்களையும் அணுகு முறைகளையும் தெளிவாக அலசிய பிறகு, ஒருமித்தக் கருத்தோடு நம் குழுமங்கள் செயல்பட வேண்டும். இதில், இப்பக்குவத்தில் நாம் பின்தங்கி உள்ளோமோ என்று நான் நினைப்பதுண்டு. உத்தமம் என்ற இந்த அமைப்பு எல்லாத் தமிழர்களுக்கும் சொந்தமான ஒரு அமைப்புதானே. இதில் மாற்றம் தேவை என்றால் அதில் ஈடுபாடு கொண்டு மாற்றத்திற்கு வழி வகுக்க வேண்டும். தற்சமயம் உத்தமம் மீண்டும் சுறுசுறுப்புடன் முனைப்புடன் செயல்படத் துடிக்கின்றது. இந்த வருட இறுதியிலோ அடுத்த வருட தொடக்கத்திலோ தேர்தல்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. ஆவல் உள்ளோர் அதில் உறுப்பினர்களாகி அதை நல்வழியில் நடத்த உதவ வேண்டும் .

? ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ நீங்க‌ள் முன்னெடுத்த‌ துய‌ர் துடைப்பில் குறிப்பிடத்த‌க்க‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளாக‌ எதைக் க‌ருதுகிறீர்க‌ள்?

தமிழ் வளர வேண்டுமென்றால் தமிழன் வாழ வேண்டும், வளர வேண்டும். ஈழத்தமிழனும் அவனுடைய நிலப்பரப்பும் நம் அண்டை நாட்டில் குறைந்து கொண்டே வருகின்றது. இதற்கும் மேலாக அவன் படும் அல்லல்களுக்கு அளவேயில்லை. ஈழத் தமிழர்களின் துயரங்களும் அதன் அழுத்தங்களும் வெளி உலகத்திற்கு தெரிவதேயில்லை. தமிழகத் தமிழனுக்கே முழுமையாகத் தெரிவதில்லை. அரசின் சட்ட திட்டங்களாலும் செல்வாக்குடைய ஊடகங்களின் இருட்டடைப்பு, திரிபு போன்ற உத்திகளினாலும், தமிழகத் தமிழர்களின் உணர்வுகளைத் திசை திருப்பி வைத்துள்ளார்கள். இந்தச் சூழல் தமிழனாக நாம் ஈழத்தமிழனிற்கு அனுதாபம் காட்டா விட்டாலும், மனித நேயத்தோடான அனுதாபங்களும் குறைவாகவே வெளிக்காட்டும் ஒரு நிலையை உருவாக்கியிருக்கின்றது. இதையெல்லாம் காண மனம் பொறுக்குதில்லைதான் . ஆயினும் நம்மால் செய்ய முடிந்தது குறைவே. இங்கு Tamils of Northern California (TNC) என்ற ஈழத் தமிழர் அமைப்பொன்று உண்டு. இதில் உறுப்பினனாகயிருந்து, அவர்களுடன் இணைந்து, அகதிகளின் வாழ்வில் ஒரு சிறு ஒளியேற்ற, தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (TRO - Tamils Rehabilitaton Organization சர்வதேச தமிழ் தொழில்நுட்பவியலாளர் கழகம் இணையத்தள முகவரி: www.troonline.org ), சுனாமி நிவாரணக் குழு, International Medical Health Organization என்ற தொண்டு நிறுவனங்களின் மூலம் பொருள் உதவி செய்து வந்துள்ளேன். மேலும் ITTPO (International Tamil Technical Professionals' Organization -இணையத்தள முகவரி: www.ittpo.org ) என்ற அமைப்பில் பல இயக்குனர்களில் ஒருவனாக நானும் உள்ளேன். என்னால் முடிந்த பொருளுதவியும் இங்கு செய்து வருகின்றேன். போரால் சீரழிந்திருக்கும் வடகிழக்கு ஸ்ரீலங்காவில் ஈழத்துப் பகுதிகளில் தொழில் அறிவு சார்ந்த வளர்ச்சிகளை, அங்குள்ள மக்கள் பலன்பெறும் வகையில் கொண்டு வருவதே இவ்வமைப்பின் குறிக்கோள். இதன் அடிப்படையில்தான் 'VanniTech' (Vanni Institute of Technology - வன்னி தொழில்நுட்பவியல் நிறுவகம் இணையத்தள முகவரி: www.vanni.org ) என்ற தொழில்நுட்பப் பட்டறை ஒன்றை ITTPO தொடங்கி நடத்தி வருகின்றது . ஆனால் போர் சூழலில் இது நொண்டிக் கொண்டுதான் செயல்படுகின்றது. இந்த முயற்சிகளெல்லாம் ஈழத்தமிழனின் துயர்துடைப்பில் ஆக்கபூர்வமான செயல்கள்தான் என்றாலும் , ஈழத் தமிழருக்கான விடியலை நான் இன்னும் காணவில்லை. இருள் கலைந்து விடியல் வந்தே தீரும். அதுவரை பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் நம் முயற்சிகள் தொடரும். தொடர வேண்டும்.

? இன்றைய அரசியல் சூழலில், ஈழத்தில் சுமூக நிலை நிலவ வேண்டும் என்ற ஒத்த கருத்துள்ள தமிழக முதல்வர் கருணாநிதி, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர். மருத்துவர். இராமதாசு, மதிமுக நிறுவனர் வைகோ போன்றவர்கள் தங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைந்து ஈழத்தமிழர் பிரச்னைக்கான தீர்வை மத்திய அரசில் முன்வைத்தால் இந்தப் பிரச்னை எளிதில் தீர்க்கப்பட இயலுமே? இதை உணர்த்தும் வகையில் ஏதேனும் கையெழுத்து வேட்டை அல்லது மின்னஞ்சல் உத்தியை மேற்கொள்ளும் உத்தேசம் உண்டா?

ஈழத்தில் நடக்கும் இனவாத அநீதிகளுக்கு தனிப்பட்ட முறையில் நீங்கள் குறிப்பிட்ட தலைவர்கள் அனைவரும் அக்கறை கொண்டவர்கள்தாம். ஆயினும் அவரவர்கள் தங்கள் உள்நாட்டு அரசியல் களத்தின் நெருக்கடிகளில் சிக்குண்டு ஒருமித்தக் கருத்தோடு நடுவன் அரசிடம் ஆணித்தரமாக வழக்காடவில்லை என்பது உண்மை. மேலும் நடுவன் அரசும் தமிழனைச் சந்தேகக் கண்களுடன் நோக்கி, ஸ்ரீலங்கா அரசிற்கு சாதகமான தந்திரமான செயல்பாடுகளில் இறங்குகின்றது. சமீப காலமாக இந்திய அரசு, ஸ்ரீலங்கா அரசிற்கு தரும் ஆயுதங்களை சத்தமின்றி கூட்டியிருக்கின்றது என்பதே இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஈழத் தமிழனைக் கொல்வதற்கு நம் நடுவன் அரசிடமிருந்தே உதவி செல்கின்றது. உண்மை பேசத் துணிந்தவனை ஓரம் கட்டி சாயம் பூசி தனிமைப்பட வைக்கும் செல்வாக்குக் கொண்ட பத்திரிக்கையாளர்களும் சில வெகுசன ஊடகங்களும் தமிழகத்தில் உள்ளன. அநேகத் தமிழகத் தமிழனிற்கு இந்த உண்மையே தெரிந்திருக்காத நிலை. மற்றும் சிலருக்கு இது தெரிந்திருந்தும் இதைப் பற்றி விவாதிப்பதற்கோ இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கோ தயக்கம் காட்டும் சூழல். எனவே, தமிழகத் தமிழன் ஒன்றும் செய்ய முடியாத நிலை. ஈழத் தமிழனுக்கு சோதனையான காலமிது . கையெழுத்து வேட்டை / மின்னஞ்சல் உத்திகள் என்பன போன்றவற்றை இங்கு அமெரிக்காவில் பார்த்ததுண்டு. அதை முன் நின்று நடத்தாவிட்டாலும், அதில் கையெழுத்துப் போட்டுப் பங்கு பெற்றதும் உண்டு . இங்கு அது பயன் உள்ளதாகவும் இருந்திருக்கின்றது. ஆனால் இந்த உத்திகள் தமிழகத்தில் எந்த அளவு தாக்கத்தை உண்டு பண்ணும் என்று தெரியவில்லை. தமிழகத்தில் தாக்கத்தை உண்டு பண்ணுவதற்கான உத்திகள் பல ஆண்டுகளாக புலம் பெயர்ந்து வாழும் என்னிடமில்லை. ஆயினும் நியாயத்தின் அடிப்படையில் எதிர்பார்ப்புகள் உண்டு. அவை வீண் போகாது என்றே எண்ணுகின்றேன்.

? சர்வதேச தமிழ் தொழில்நுட்பவியலாளர் கழகம் என்ற அமைப்பு ஈழத் தமிழருக்கானதாக மட்டும் இயங்கும் அமைப்பா? தமிழகத்துக்கும் இதன் பங்களிப்பு ஏதும் உண்டா?

ஈழத் தமிழர்களால் தொடங்கப்பட்டு தற்சமயம் நடைமுறையில் ஈழத்தமிழருக்காக இயங்கும் அமைப்பு இது. அவர்களுக்குத்தானே இந்த உதவி இப்பொழுது அதிகம் தேவைப் படுகின்றது. ஈழத்தில் தொழில் நுட்ப கல்விக் கூடங்களோ, அதைக் கற்பிக்க நல்ல ஆசிரியர்களோ மிக சொற்பம். அவர்கள் தமிழக உறவுகளிடமிருந்து இந்த விடயத்தில் உதவியை நாடியே இருக்கின்றனர். அவர்கள் தமிழகக் கல்விக் கூடங்களிலிருந்தோ தமிழகத்தில் கற்பிக்கும் தொழில் நுட்ப வல்லுனர்கள் / ஆசிரியர்களிடமிருந்தோ வரும் உதவிகளை பெரிதும் மதித்துப் போற்றுவர் .

? எதிர்கால திட்டம் என்று மனதுக்குள் நீண்டகாலமாய் உலவும் எண்ணங்கள் ஏதும் உண்டா?

ஆசைகள் உண்டுதான். அதை நனவாக்கும் திட்டங்கள்தான் முழுமை பெறுவதில்லை. ஆகவே வெளியில் பகிர்ந்து கொள்ளுவதில் அர்த்தம் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆக இப்போதைக்கு வரும் நாட்களை ஒவ்வொன்றாகத்தான் எதிர்கொள்கின்றேன், வாழ்கின்றேன்.

மின்காணல்:- ஆல்பர்ட் பெர்னாண்டோ, விஸ்கான்சின், அமெரிக்கா.









Sunday, December 2, 2007

அமெரிக்காவில் த‌மிழ் வ‌ள‌ர்ப்போர் (3)

அய்யா அழகப்பா ராம் மோகன்,சிகாகோ.



எந்த ஒரு சமூகமும், எந்தச் சூழலிலும்


"மொழி" என்ற

தன் சொந்த அடையாளத்தைத் தொலைத்துவிடக்கூடாது!

தேமதுரத் தமிழ் அமெரிக்கத் தமிழர் இல்லங்களில், உள்ளங்களில் வேர் பாய்ச்சி விழுதுகள் விடக் காரணமானவர்கள் வணக்கத்திற்குரியவர்கள்!

தமிழைத்தவமாய்,

வேதமாய்,

வேள்வியாய்,

சுவாசமாய்,

உயிராய்,

உணர்வாய் நேசித்துதமிழ் வாழ வளர தங்களைமெழுகுவர்த்தியாய்ஆக்கிக்கொண்டுள்ளவர்களின் வரிசையில் மூன்றாவதாக அமெரிக்காவின் இல்லிநாய்ஸ் மாநிலத்தில் சிகாகோவில் வாசம் செய்யும் அய்யா அழகப்பா இராம் மோகன் அவர்களின் காணல் இடம்பெறுகிறது.

தங்களைப்பற்றி ஒரு சிறு குறிப்பு
( பிறந்தது, வளர்ந்தது, படிப்பு, தொழில்,
புலம்பெயர்தலுக்கான காரணம், பணி...)



நான் பிறந்தது மலேசிய
மண்ணான பினாங்கில்.
1939 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போர்
காரணமாக இரண்டு வயது சிறுவனாக இருக்கும்
பொழுது தந்தையார் ரப்பர் தோட்டம், வங்கித் தொழில்
ஆகியவற்றை விற்று விட்டு குடும்பத்தோடு இந்தியா
திரும்பினார். எனது பூர்வீகம் கானாடுகாத்தான்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இந்த ஊரை
இன்று இந்திய அரசாங்கம் தென் இந்தியாவில்
நான்கு புராதன பூர்வீக இடங்களில்
ஒன்றாக அங்கீகரித்துள்ளது, இது மதுரைக்கும்


திருச்சிக்கும்
இடையே உள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தையும் அழகப்பா
பல்கலைக்கழகத்தையும் கொடையாக ஈந்த வள்ளல்கள்
வாழ்ந்த ஊர்.
டில்லிக்கருகில் உள்ள பிர்லா கல்லு}ரியில்
அறிவியல் பட்டமும், பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில்
பொறியியல் பட்டமும் பெற்றேன், அதைத் தொடர்ந்து இரு
ஆண்டுகள் சென்னையில் மோட்டார் வாகனத் தொழிற்சாலையில் பொறியியல் வல்லுனராகப் பணி, அதன் பின்னர் 1963 ல்
அமெரிக்காவிற்கு மேற்படிப்பிற்காகச் சென்று 1965 ல் சிகாகோவில் முதுகலை பட்டம் பெற்றேன்.
அமெரிக்காவில் குடியுரிமை பெற்று இதுநாள் வரை அமெரிக்கத்
தமிழனாகக் குடும்பத்தோடு இருந்து வருகிறேன், இரு வருடங்
களுக்கு முன்பு ஓய்வு பெற்று கடந்த இரு ஆண்டுகளாக தமிழ்ப்
பணி செய்து அது இன்றும் தொடர்கிறது.
எனது மனைவி திருமதி மீனாட்சி உணவு சத்து துறையில்
முதுநிலை பட்டம் பெற்று ஆய்வாளாராக பல்கலைக்கழக
மருத்துவ மனையில் பணி ஆற்றுகிறார். ஒரு மகன், ஒரு
மகள், இருவரும் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்து
ஆளானவர்கள். பிள்ளை மருத்துவர், மகள் காப்பீட்டுத்
துறையில் மேலாளர், 5 பேரக் குழந்தைகள், சுருக்கமாகச்
சொன்னால்,
ஈன்ற நாடு மலேசியா!
பண்பாட்டை ஊட்டி வளர்த்தது தமிழ்நாடு!
என்னை உலகத் தமிழனாக ஆக்கி,
என்னை எனக்கு முழுமையாகப் புரிந்து
கொள்ள வைத்தது அமெரிக்கப் பின்புலம்.

? அமெரிக்காவில் இருந்துகொண்டு உலகத் தமிழ் மொழி
அறக்கட்டளையை நிறுவி உலகெலாம் தமிழ் சமுதாய
முன்னேற்றத்துக்கு மிகப்பலரும் பாராட்டும்வகையில்
பணியாற்றி வருகிறீர்கள். இதனை நிறுவிய நோக்கம்,
செயல்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து தமிழ்த்தினை
வாசகர்களுக்கு கொஞ்சம் விரிவாகச் சொல்லமுடியுமா?

சிறு வயதிலிருந்தே தமிழ் வழிக் கல்வி,
ஆங்கிலத்திலும் அதன் வளம் காரணமாகப் பற்று, எனது
தமிழ் ஆர்வம் மிகுதி, எங்கள் வீட்டில் தமிழ் புலவர்களுக்கு மிகுந்த மரியாதை, மிகுந்த உபசரிப்பு, எனது இளம் வயதில் தமிழின் அழகும் திறனும் என் மேல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின, தமிழ் இலக்கியமும் படைப்புகளும் என்னை வெகுவாக ஈர் த்தன, இருப்பினும் மனத்துக்குள் ஏதோ ஒரு பெரும் நெருடல், தேடல், அது தமிழ் நாட்டின் ஏழ்மையையும் சாதி மத ஏற்றத் தாழ்வுகளையும் பற்றியது, ஏன் இன்னும் அவைகள் ஓழிக்கப்படவில்லை. இந்தியச் சிந்தனை அதிலும் குறிப்பாக தமிழ்ச் சிந்தனை தான் தோற்றுவித்த சமயங்களின் மூலமாகவும். புலம் பெய ர்ந்து வந்து தமிழ் மண்ணில் ஒட்டிக்கொண்ட சமயங்கள் மூலமாகவும். ஏன் தமிழர்களை உலக நாடுகளுக்கு ஈடாக முன்னேற்றவில்லை என தேடினேன், அதற்காக வைணவம். சைவம். ஆசிவகம். சமணம். கிருத்துவம், இசுலாம், யூதம் போன்ற மதங்களை ஆழமாகத் தேடிப் போனேன் விடை காண. முழுமையான விடை எதிலும் கிடைக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில், என்னுடைய 40 ஆண்டு அமெரிக்க வாழ்க்கையில், 1990 ஆம் ஆண்டில் எனக்கு இத் தேடலுக்கான விடை திருக்குறளை அமெரிக்க மக்களோடு ஒப்பிட்டுப் பார்த்ததில் கிடைத்தது.
திருக்குறள் மற்றும் பலதரப்பட்ட சமய நூல்களோடு பல ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பு இருந்ததால். அமெரிக்க மக்களின் ஒவ்வொரு வாழ்வியல் முறையும் திருக்குறள் நெறியோடு பெரும்பாலும் ஒத்துப் போவது தெரிகிறது, அமெரிக்க மக்கள் தங்களுக்கே தெரியாமல் திருக்குறளை அவர்களது நாட்டு அரசியலிலும். தனி மனித வாழ்விலும் பின் பற்றி வந்து கொண்டு இருக்கிறார்கள் எனக் கண்டேன், மனிதன். மனிதம். மனிதநேயஒருமைப்பாடு.
சமயங்களுக்கு அப்பாற்பட்ட ஒழுக்க நெறி. போன்ற கருத்துக்கள் திருக்குறள் வெளிச்சத்தில் என்னுள் முழுமை அடைந்கன, தனி மனிதப் பிரச்சனைகளும் நாட்டுப் பிரச்சனைகளும் திருக்குறள் வெளிச்சத்தில் ஓடி விடுவதைக் கண்டேன், அத்தகைய அறநெறியை கிருத்து பிறப்பதற்கு முன்னரே ஒரு தமிழன் எழுதி வைத்துப்போனதைப் பார்த்து பிரமித்தேன், அதனால் திருக்குறளை வள்ளுவமாக ஏற்றுக் கொண்டேன்.
அதைத் தோற்றுவித்த தமிழ் பண்பாட்டின் மேல் ஒரு தனி மரியாதையும் ஏற்பட்டது, தங்களுக்குள்ளேயே இம்மாதிரி ஒரு புதையலை வைத்துக் கொண்டு தமிழர்கள் ஏன் அதை மறந்து இருளிலே நெடுங்காலமாக உழன்று கொண்டு இருக்கிறார்கள் என வியந்தேன், அதன் காரணமாக திருக்குறளை பொதுமறையாகவும் மற்ற சமய நூல்களை தனி மறைகளாகவும் கண்டு திருக்குறளை மூச்சும் மையமுமாக வைத்து உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை 1990ல் நானும் எனது அமெரிக்க நண்பர்களும் நிறுவினோம்.
அரசியலும். சாதி சமய வேறுபாடுகளும் இல்லாமல் திருக்குறளை உலக மக்களிடையேயும் தமிழ் மக்களிடையேயும் பல வழிகளில் கொண்டு செல்லவும். நம்பிக்கை வழி அல்லாமல் அறிவு சார்ந்த சிந்தனை வழிகளில் நின்று. தமிழில் மேற்கத்திய அறிவியலை கொண்டு வரவும் எமது அறக்கட்டளை இன்றுவரை தொடர்ந்து தொண்டு செய்து வருகிறது, இது வரை 17 திட்டங்கள் நிறைவேற்றுபட்டுள்ளன, அதன் முழு விபரங்களையும் எமது
www.kural.org என்ற வலையில் காணலாம்.
குறிப்பாக திருக்குறளை பைபிளைப்போல உருவகப்படுத்தி 1800 பக்கங்களில் 1 அங்குல பருமனில் மிக மெல்லிய காகிதத்தில் அமெரிக்காவில் உள்ள பைபிள் அச்சிடும் அச்சகத்திலேயே 10,000 பிரதிகள் அச்சிட்டோம். அதன் தனிச் சிறப்பு என்னவெனில் திருக்குறளுக்கு மட்டும் 700 பக்கங்கள். அதோடு அத் திருக்குறளைத் தந்த தமிழ்ப் பண்பாட்டை கட்டுரைகளாக விளக்க 900 பக்கங்கள். அதைத் தொடர்ந்து மூன்றாவது பகுதியாக தமிழின எதிர்கால வழிகாட்டிக்கு 200 பக்கங்கள். இவ்வாறு மூன்று பகுதிகளையும் ஒரே புத்தகமாக ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சமைத்து உலகம் முழுதும் 2000 ஆண்டில் வெளியிட்டுப் பரப்பினோம். அதனை திரு.அப்துல் கலாம் இந்தியாவிலும், உச்ச நீதி மன்ற நீதிபதி திரு ராஜேந்திரன் சிங்கப்பூரிலும், மலேசிய அமைச்சர் திரு சாமிவேலு கோலாலம்பூரிலும் வெளியிட்டார்கள். இதைச்
செய்து முடிக்க உலகத் தமிழர்கள் நன்கொடையாக 1,000,00 டாலர்கள் தந்து உதவினார்கள்.
இன்னொரு கோணத்தில் பார்த்தால் முதன் முதலாக உலகத் தமிழ்ச் சமுதாயம் தனக்குத்தானே செய்து கொண்ட முதல் கூட்டு முயற்சி இதுவாகத் தான் இருக்கும்.
திருக்குறளை 108 மந்திரங்களாக இசை வடிவிலும். திருக்குறள் காமத்துப்பாலை 25 ராகங்களாக இசை நாடக வடிவிலும் வெளியிட்டோம். புதுக் கவிதை. நினைக்கப்படவேண்டிய சான்றோர்களைப் பற்றிய சுருக்கமான திறனாய்வு போன்ற நூல்கள் வெளியிடப்பட்டன. இது ஒரு புறம் இருக்க, மேற்கத்திய அறிவியலை தமிழுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற பெரு நோக்கில் இரு பெரும் திட்டங்களை உருவாக்கினோம்.
ஒன்று ஸ்டீபன் ஹாங்கிங் என்ற இயற்பியல் அறிஞருடைய பிரபலமான "காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்" என்ற நுலை வெளியிட்ட திட்டம், மற்றொன்று இப்பொழுது தான் நிறைவு பெற்றது.
இந்த பிரமாண்டமான இரண்டாவது திட்டத்தை நிறைவேற்ற 100,000 டாலர்கள் செலவானது. இது தமிழ் வழி கல்வி கற்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் அறிவியல் திறத்தை குறிப்பாக இயற்பியல் சிந்தனைத் திறத்தை உலகத் தரத்திற்கு உடனே உயர்த்துவது பற்றியது.
இத் திட்டத்தின் முக்கிய நோக்கம் அமெரிக்க ஆனென்பர்க் அறக்கட்டளையும் கேம்பிரிஜ் பல்கலைக் கழகமும் கூட்டாக உருவாக்கிய 26 மணி நேர அளவில் (52 அரை மணி நேர காட்சிகள்) உண்டாக்கிய இயற்பியல் பாடங்களையும் அதனோடு இணைந்த 3 புத்தகங்களையும் (1500 பக்கங்கள்) தமிழாக்கம் செய்து அறிவியல் தமிழை உலகத் தரத்திற்கு உயர்த்துவது தான், இதனை நிறைவேற்ற பொது மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம், நீங்களும் எதாவது ஒரு பள்ளியை தத்து எடுத்து இத் திட்டத்தைப் பரப்ப உதவலாம், மேலும் விபரங்களுக்கு என்னோடு
thiru@kural.org என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் தொடணுபு கொள்க, அல்லது 630 985 3141 என்ற தொலைபேசி மூலம் கூப்பிடுங்கள்.
இனி வருங்கால திட்டங்கள் பற்றி கூறுங்கள் எனக் கேட்டுள்ளீர்கள், மூன்று திட்டங்களைத் தீட்டி உள்ளோம், முதலாவது 133 திருக்குறள் மந்திரங்களை வண்ணம் தீட்டும் புத்தகமாகவும். சிறு வயது குழந்தைகளும் சிறார்களும் மனவளக்கலையை (தியானம்) திருக்குறள் வழியல் இசை வடிவாக கற்கவும் ஆங்கிலம்-பிரெஞ்ச்-ஸ்பானிஷ்-தமிழ் ஆகிய 4 மொழிகளிலும் தயாரிக்க உள்ளோம்.
இரண்டாவது 133 திருக்குறள் மந்திரங்களை ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறு கதையாக புத்தக வடிவில் தயாரித்து அளிக்க உள்ளோம்.
மூன்றாவது தமிழ்ப் பண்பாட்டின் இசை-நாட்டிய-நாடகக் கூறுகளை ஒலி-ஒளி வடிவில் தகவல் களஞ்சிய குறுந்தகடுகளாக தர உள்ளோம், உங்கள் அனைவரது ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை, தொடர்பு கொள்க.

? தமிழின வழிகாட்டியாக திருக்குறளை ஆங்கிலத்தில் எளிமையான விளக்கத்தோடு புதுமையாக கொணர்ந்தீர்கள்! இதனால் உலக மக்கள் தமிழ் பண்பாடு..உலகப் பண்பாடாக ஏற்கும் நிலைக்கு வித்திட்டிருக்கிறீர்கள்? இந்த நூலுக்கு வரவேற்பு எப்படியுள்ளது?
எதிர்பார்த்த அளவுக்கு இந்த நூல் வெற்றியைத் தேடித்தந்துள்ளதா? இதை உலகமக்களிடையே எடுத்துச் செல்ல ஏதும் முயற்சி மேற்கொண்டிருக்கிறீர்களா?

தமிழ் மறையான திருக்குறளை உலகப் பொது மறையாக எடுத்துச் செல்ல எமது அறக் கட்டளை பல வழிகளில் செயல்பட்டும் தொடர்ந்து முயன்றும் வருகிறது, இதுவரை 10,000 பிரதிகளில் 9000 பிரதிகள் உலக மக்களால் வாங்கப்பட்டுவிட்டன, இப் புத்தகம் ஆங்கிலம் பேசும் அனைத்து நாடுகளிலும் பவனி வந்து கொண்டு இருக்கிறது, ஒரு புரவலரால் 200 க்கும் மேற்பட்ட இந்திய பல்கலைக் கழக நூலகங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது, எமது அறக்கட்டளை அமெரிக்க நாட்டு அனைத்து நூலகங்களுக்கும் இந் நூலைப் பற்றி செய்தி அனுப்பி அதன் பயனாக பல அமெரிக்க நூலகங்கள் இந் நூலை வாங்கி உள்ளன. வாசிங்டனில் உள்ள அமெரிக்க லைப்ரரி ஆப் காங்கிரஸ் நூலகத்திலும் உள்ளது.
இன்னும் பல செய்ய வேண்டும். அதற்கு உங்களைப் போன்ற தமிழர்களின் ஒத்துழைப்பு தேவை. இது தொடர்பாக அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். இதனைப் படிக்கும் ஒவ்வொரு தமிழனும் அவர் எங்கிருந்தாலும் இந்த நூலின் 10 பிரதிகளை வாங்கி அன்பளிப்பாகத் தன்னைச் சுற்றி உள்ள தமிழரல்லாத நண்பர்களுக்கு கொடுக்க வேண்டும். இதனால் குறள் நெறியும் பரவ வழி உண்டு. அதனால் அவர்களுக்கம் ஒரு லாபம் உண்டு. அது என்ன தெரியுமா? இதுவரை அவரைப் பற்றிய தன் நண்பரின் கணிப்பு உயர்ந்து இப்படியும் ஒரு பண்பாட்டுப் பிண்ணனி இவருக்கு உண்டா என்று வியந்து இனிமேல் தன் நண்பரைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு தனி மதிப்பும் மரியாதையும் இருவரிடையேயும் உண்டாகும்.
இன்னம் ஒரு வேண்டுகோள், ஒவ்வொரு தமிழனும் இனிமேல் ஒவ்வொரு திருமணம், பிறந்த நாள் விழாவில் இப் புத்தகத்தை அன்பளிப்பாக கொடுக்கும் பழக்கத்தை உணடு பண்ணிக் கொள்ள வேண்டும்.

? இயற்பியல் பாடங்களையும் அதனோடு இணைந்த 3 புத்தகங்களையும் தமிழாக்கம் செய்து அறிவியல் தமிழை உலகத் தரத்திற்கு உயர்த்தும் தங்களின் மூன்றாவது திட்டமானது மிகவும் பயனுள்ள முயற்சியாகத் தெரிகிறது.நிறைவேற்ற பொது மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என்று சொன்னீர்க‌ள். த‌மிழ‌க‌த்தில் பொதுமக்களிடம் இத‌ற்கு வ‌ர‌வேற்பு எப்ப‌டியுள்ள‌து?

2007ம் ஆண்டில் இதுவரை தமிழ்நாட்டில் இருபது பள்ளிக்கூடங்களில் (தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ) தனிப்பட்ட புரவலர்களால் ஒரு பள்ளிக்கு ஒரு இலட்சம் ரூபாய் நன்கொடையில் இந்த இயற்பியல் திட்டம் நடந்துகொண்டிருக்கிறது.
அதோடு ஒரு பிரபலமான தனியார் துறை நிறுவனமான‌ சென்னை நியுமெரிக் பவர் சிஸ்டத்தின் நிர்வாக இயக்குனர் திரு.ஆர்.செல்லப்பன் தனது விஞ்ஞானப் பணியாளர்களுக்கு இத்திட்டத்தை உபயோகப்படுத்த வசதிகள் செய்துகொடுத்துள்ளது. இதன்மூலம் அவர்களது கண்டுபிடிப்பு திறன் மேலும் வளரும் என நம்புகிறது. இன்னும் பலர் எம்மோடு தொடர்புகொண்டு முனைந்து வருகிறார்கள்.
5) இது குறித்து த‌மிழ‌க‌ அர‌சின் க‌ல்வித்துறை அதிகாரிக‌ளை அணுகினீர்க‌ளா? அவ‌ர்க‌ள் மூல‌மாக‌ மேனிலைப்ப‌ள்ளிக‌ளிலோ, க‌ல்லூரிக‌ளிலோ இதைக் கொண்டு செல்ல‌ முய‌ற்சித்தீர்க‌ளா?
அழ.இராம்:- இதுகுறித்து தமிழக திட்டக்கமிசனுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். மிகுந்த ஆர்வத்தோடு பரிந்துரை செய்து எங்களது திட்டக்கோரிக்கையை கல்வி அமைச்சகத்துக்கு அனுப்பிவைத்துள்ளார்கள்.
அதன்பின் உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.பொன்முடி மற்றும் திரு.தங்கம் தென்னரசு ஆகியோரையும் நேரில் சென்று பார்த்து நினைவு படுத்தினேன். இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை.
பாண்டிச்சேரி அரசின் கல்வி அமைச்சர் திரு.ஷாஜகான் அவர்களையும் சந்தித்து இத்திட்டம் பற்றிவிளக்கினேன். அவர் மிகுந்த ஆர்வம் கொண்டு மூன்று முறை அழைப்புவிடுத்து கல்வியாளர்களையும், நூல்நிலைய நூலகர்களையும், சந்தித்து திட்டம் பற்றி விளக்க உதவி செய்தார்கள்.
இப்போது புதுச் சேரியில் உள்ள அனைத்து (50) நூலகங்களிலும் இத்திட்டத்தை நிறைவுபடுத்த ஆலோசித்து வருகிறார்கள். கூடியவிரைவில் புதுச்சேரி பொதுமக்களின் இயற்பியல் அறிவுத்திறன் உலகத் தரத்திற்கு உயர வாய்ப்புகள் பெருகும் என நம்புகிறேன்.
சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கை நடத்தும் தமிழ்நாடு விஞ்ஞான வளர்ச்சித்துறை இயக்குனரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அங்கும் இத்திட்டம் நிறைவேற்றப்படலாம். தமிழ்நாட்டில் எல்லாமே மெதுவாக நகர்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
? த‌மிழ‌க‌ அர‌சில் பாட‌த்திட்ட‌க்குழுவொன்று உள்ள‌து. அவ‌ர்க‌ளை நீங்க‌ள் அணுகினால் இத‌ன் நோக்கம் நிறைவேற‌ வாய்ப்புள்ள‌தே?

எந்தவகையிலும் பாடத்திட்டத்தோடு முரணுடையது அல்ல; பாடத்திட்டத்திற்கு இணங்க உண்டாக்கப்பட்டதுமல்ல. இயற்பியல் எந்த ஒரு நாட்டுப் பாடத்திட்டத்திற்கும் கட்டுப்பட்டதல்ல. இத்திட்டம் உலகத் தரத்திற்கு ஏற்ப நிறைவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் பாடத் திட்டத்திற்கு மேலே இயற்பியல் திறனை வளர்க்க உதவும். அதுவும் ஒலி, ஒளி காட்சி வழியாகவும், எழுத்துவடிவிலும் பாடம் புகட்டிச் செல்கிறது.
இத்திட்டம் தமிழக பாடத்திட்டத்தை எந்தவகையிலும் மாற்றச் சொல்லவில்லை. பாடத்திட்டத்தோடு தேர்வு முறை அடிப்படையில் அல்லாது இயற்பியல் கருத்துக்களை எளிதில் காட்சி வழி விளக்கி இத்திட்டம் செயல்படுகிறது. அதே சமயம் பாடத்திட்டம் உபயோகிக்கும் அனைத்து தமிழ் கலைச் சொற்களையும் எமது இயற்பியல் திட்டம் கையாள்கிறது. ஆகவே பாடத்திட்டத் துறையோடு கலந்து செயல்படவேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. இத்திட்டத்தின் மூலம், பாடத்திட்ட வரைமுறைகளில் எதிலும் மாற்றம் இல்லாமல் அரசின் பாடங்கள் மேலும் எளிதாக புரிய வழி உண்டாகும்.

? பொதும‌க்க‌ளையோ, க‌ல்வித்துறை அதிகாரிக‌ளையோ நீங்க‌ள் ச‌ந்திக்கும்போது இது நல்லமுயற்சி என்று சொன்னாலும் அர‌சு அம‌ல்ப‌டுத்த‌வேண்டிய‌து என்று ஒதுங்கும் வாய்ப்புள்ள‌தால் நீங்க‌ள் க‌ல்வித்துறை அமைச்ச‌ரையோ, த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ரையோ அணுகும் எண்ண‌முள்ள‌தா?

இத்திட்டம்பற்றி உரையாட தமிழக முதல்வரை சந்திக்க முயற்சிகள் எடுத்தேன். இதுவரை அந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை. கல்வித்துறை அமைச்சரை மட்டும்தான் நேரில் கண்டு பேச அனுமதி கிடைத்தது.
8) வருங்காலத் திட்டமான 133 திருக்குறள் மந்திரங்களை வண்ணம் தீட்டும் 4மொழி வெளியீடு எந்த அளவில் உள்ளது?
அழ.இராம்:- திருக்குறள் மந்திரங்களை நான்கு மொழிகளில் வெளியிடும் திட்டம் 2008ம் ஆண்டு நிறைவு பெறும். ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பும் பிரெஞ்ச் மொழிபெயர்ப்பும் நடைபெற்றுக்கொண்டுவருகிறது. இந்தப் பேட்டியை வலையில் படிக்கும் நேயர்களில் யாரேனும் பிரெஞ்ச், ஸ்பானிஷ் மொழிபெயர்ச்சி உடையவர்கள் என்றால்
thiru@kural.org
என்ற மின்னஞ்சல் மூலம் உதவி செய்ய முன்வரலாம்.

? 133 திருக்குறள் மந்திரங்களை சிறு கதையாக புத்தக வடிவில் தயாரித்தளிக்கும் பணியைச் செய்வது யார்? அது எந்த நிலையில் உள்ளது? இதற்குரிய சிறுகதைகளை யாரேனும் எழுதிக்கொடுக்க முன்வந்தால் அந்த எண்ணமுடையவர்கள் உங்களைத் தொடர்புகொள்ளலாமா?

திருக்குறள் மந்திரங்களுக்கான சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டும், எழுதச் சொல்லப்பட்டும் வருகிறது. உங்களில் யாரேனும் எழுத முன்வந்தால் வாய்ப்புகள் கொடுத்து வரவேற்போம். உடனே என்னை
thiru@kural.org என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்க.
10) தமிழ்ப் பண்பாட்டின் இசை-நாட்டிய-நாடகக் கூறுகளை ஒலி-ஒளி வடிவில் தகவல் களஞ்சிய குறுந்தகடுகளாக தரும் முயற்சியில் திரைப்பட நடிகநடிகையரை ஈடுபடுத்தும் எண்ணமுள்ளதா?
அழ.இராம்:- இன்றைய தமிழ்நாட்டில் திரைப்பட கலைஞர்கள்தான் அதன் தலைவிதியை நிர்ணயித்து வருகிறார்கள். ஊடகங்கள் முழுவதும் அவர்களைப்பற்றிய செய்திகளும், அரசியலில் அவர்களது தலைமை போட்டிகளும், மத, ஆன்மீக பண்பாட்டுக் கூறுகளில் அவர்களது பாதிப்பும் அளவுக்குமேல் காணப்படுகிறது.
அதனைப்பின்பற்றி தமிழ் நாட்டின் இசை - நாட்டிய - நாடகச் செய்திகளை இன்னும் ஒரு திரைப்பட பின்புல பாதிப்புடன் செய்ய விழையவில்லை. சில சமயங்களில் தமிழும், தமிழ் இசையும், தமிழ்ப் பண்பாடும் தேடினாலும் திரைப்படத் துறையில் இன்று கிடைக்குமா என்பது சந்தேகமே. ஆகவே எங்களது ஒலி, ஒளி குறுந்தகடுகள் திரைப்பட ஊடகத்திற்கும் அப்பால் சென்று, தமிழகப் பண்பாட்டுப் பின்னணியில் செயல்படும்.

? இதுவரை சாதித்தது என்ன? இனி சாதிக்கப்போவது என்ன?

கடந்த இருபது ஆண்டுகளாக இந்த அறக்கட்டளையைப் பற்றிச் சொல்லி ஆதரவு தேடும் பணிமூலமாக தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளுக்கும் மூன்று முறை சென்று வந்தேன். ஒத்த மனம் உள்ள தமிழர்கள் அங்கெல்லாம் இருக்க காணும் பேறு பெற்றேன். அவர்கள் எல்லாம் எனக்கு தமிழ் தந்த உறவு. குறிப்பாக அவர்களை எல்லாம் பற்றி திருக்குறள் புத்தகத்தின் இறுதிப் பகுதியில் நன்றி கூறியுள்ளேன். நேயர்கள் அனைவரும் மேலதிக விபரங்களுக்கு அங்கு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

? உங்கள் கருத்துக்கு ஒத்த எண்ணத்தோடு உடன் வந்தவர்கள் குறித்து உங்களுக்குள் மலரும் நினைவுகள் இருக்கும். அவர்கள் குறித்துப் பகிர்ந்துகொள்ள இயலுமா?

இந்தப் பொதுப்பணியில் என் மனதை நெகிழ்வித்த ஒன்றல்ல இரண்டு சம்பவங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒன்று, திருக்குறள் புத்தக வெளியீட்டிற்கு முன் அத‌ன் நிமித்தம்சிங்கப்பூர் வானொலி நேர்காணல் நிகழ்ச்சியில் நடந்தது. இரவு 10.30லிருந்து 12.00 மணிவரை நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கேள்விகள் கேட்டு பங்கேற்றார்கள்.
அவர்களை எல்லாம் இத் திட்டத்திற்கு ஆதரவு தந்து ஊக்குவிக்குமாறு வேண்டினேன். அதன் பின்னர் நான் சிகாகோ வந்தடைந்தபோது என் மனதை நெகிழ்வித்த சம்பவம் நடைபெற்றது.
தபால்களை திறந்து பார்த்தபோது பெயரைச் சொல்லாமல் முகவரியும் இல்லாமல் "ஒருவர்" என்னையும் என் பணியையும் வாழ்த்தி எந்த இடையூறு வந்தாலும் சளைக்காமல் எதிர்நின்று இந்தப்பணியை முடித்துவிடுங்கள் எனக்கேட்டு அதற்காக 5000 சிங்கப்பூர் டாலர்கள் கொண்ட ஒரு மணி ஆர்டரையும் இணைத்து அனுப்பி இருந்தார். இதுநாள்வரை அவரைத் தேடி வருகிறேன். அவரை அடையாளம் காண இயலவில்லை. இதனை அவர் படித்தால் உடனே என்னோடு தொடர்புகொள்ளக் கேட்டுக்கொள்கிறேன்.
இரண்டு, திருக்குறள் நூல் வெளியீடு அன்று அதன் முதல் பிரதியை மேதகு திரு.கலாம் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள யார் தகுதியுடையவர் என தேடியபொழுது கிடைத்தவர் கேரளநாட்டு மடபதி சிவானந்தர் ஆவர்கள்.அவர் ஆதிசங்கரர் பிறந்த காலடிக்கருகே உள்ள ஊரில் இன்று ஒரு பெரிய இயக்கத்தையே வள்ளுவர் காட்டிய வழியில் நின்று திருக்குறளை வேதப்புத்தகமாகக் கொண்டு நடத்தி வருகிறார்.
அவரோடு இன்று 30,000 கேரளமக்கள் சார்ந்து இருக்கிறார்கள். அவரை நேரில் காணச் சென்றேன். அவரோடு ஒருநாள் முழுதும் இருந்துவந்தேன். அந்தமகா பெரியவருக்கு அந்தமுதல் பிரதியை திரு.கலாம் கொடுத்தபொழுது என் மனது நெகிழ்ந்தது!
ஒரு வியப்பூட்டும் செய்தி! அவர்களது வேதப்புத்தகம் மலையாள மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகம்!

? வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நீங்கள் தெரிவிக்கும் செய்தி என்ன?

தமிழர்கள் ஒரு மொழியினர்! ஆனால் பலநாட்டினர், என்ற நோக்கோடு வாழ வேண்டும். குழுக்கள் குழுக்களாக வாழாமல் கூடி வாழ வேண்டும். தமிழர்கள் எச்சாதியினர் ஆயினும் எந்த மதத்தவராயினும் திருக்குறளை பொதுமறையாகவும் மற்றைய மறைகளை தனிமறைகளாகவும் ஏற்று வாழவேண்டும்.

திருக்குறள் தான் தமிழர்களது மையப்புள்ளி. அப்புள்ளியைக்கொண்டு வரையப்படும் தமிழ் வட்டம் எல்லா சாதியினரையும், மதத்தினரையும், நாட்டினரையும், இனத்தினரையும் ஏற்ப பிரிவடையும் சக்தியுள்ளது.
மற்ற வட்டங்களில் தமிழர்கள் இயங்கினால் இணையும்பொழுது முட்டிக்கொள்வார்கள்; உடைந்தும் போவார்கள். உலகநாடுகளில் எங்கினும் ஒரு தமிழன் இன்னலுற்றால் அவனுக்காக கண்ணீர் சிந்த ஏணைய தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

அதுதான் அவர்களது பாதுகாப்பு.
வாழ்க தமிழ்!
வளர்க தமிழினம்!!
நன்றி.

Friday, October 26, 2007

அமெரிக்காவில் த‌மிழ் வ‌ள‌ர்ப்போர் ( 2 )


முனைவர்,
வாசு அரங்கநாதன்,
பென்சில்வேனியாப்
ப‌ல்க‌லைக்
க‌ழ‌கம்,
அமெரிக்கா.


தமிழைத் தவமாய்,
வேதமாய், வேள்வியாய்,
சுவாசமாய், உயிராய்,
உணர்வாய் நேசித்து தமிழ் வாழ வளர
தங்களை மெழுகுவர்த்தியாய் ஆக்கிக்
கொண்டுள்ளவ‌ர்க‌ள் வ‌ரிசையில்
இர‌ண்டாவ‌தாக‌ வ‌ல‌ம்வ‌ருகிறார்,
அமெரிக்காவின் பென்சில்வேனியாப்
ப‌ல்க‌லைக்க‌ழ‌கத்தில் பணியாற்றி வருகின்றார்
முனைவர் வாசு அரங்கநாதன்.

அறிமுக‌ம்.....

தமிழ்நாட்டின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்
மொழியியலில் முனைவர் பட்டத்தைப் பெற்றுத்
தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இரண்டு ஆண்டுகள்
பணிபுரிந்த பிறகு 1989 முதல் அமெரிக்காவில்
தமிழ்த்தொண்டைத் தொடர்ந்துவருபவர்.

1989 முதல் 1992 வரை சியாட்டலில் உள்ள
வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் தமது
இரண்டாவது முதுகலைப் பட்டப் படிப்பைச்
செய்துகொண்டு கணிப்பொறி கொண்டு தமிழ்
மொழியை ஆராயும் பணியில் ஈடுபட்டார்.

பின்னர் இரண்டு ஆண்டுகள் மிச்சிகன் பல்கலைக்
கழகத்திலும்அதற்குப் பிறகு பென்சில்வேனியாப்
பல்கலைக் கழகத்திலும் தம‌து தமிழ்த்தொண்டைத்
தொடர்கிறார்.
கடந்த பத்து வருடங்களாக பென்சில்வேனியாப்
பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து வருவதோடு,
தமிழ்இலக்கியம் மற்றும் மொழியிலில் தம‌து
ஆராய்ச்சியைத் தொடர்ந்து வருகிறார்.

சங்ககால இலக்கியங்களையும் பக்தி இலக்கியங்
களையும் ஆய்ந்து வருவதோடு கணிப்பொறி வழி
தமிழ் மொழி கற்பிப்பது பற்றியும் தன‌து
பணியைச் செய்துவருகிறார்.

http://ccat.sas.upenn.edu/plc/tamilweb,

http://www.southasia.upenn.edu/tamil

போன்ற இணையப் பக்கங்களில் கணிப்பொறி
வழி தமிழ் மொழி கற்றுக்கொள்ளப் பாடங்களை
வடிவமைத்துள்ளார். அமெரிக்காவின் மத்தியக்
கல்வித்துறையின் உதவியோடு
பக்கங்களை உலகெங்கிலும் உள்ள தமிழ்
மாணாக்கர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள தமிழ் வம்சாவழி
மாணவர்களுக்கும் இப்பங்கங்கள் பயன்பட்டு
வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு பற்றி படிக்கும் அமெரிக்க மாணாக்
கர்களும் இவ்விணையப் பக்கங்களைப் பயன்படுத்தி
வருகின்றனர்.

தமிழ் மொழி மற்றும் தமிழ் பண்பாடு பற்றிய
விளக்கமான பாடங்கள் இவ்விணையப்
பக்கங்களில் உள்ளன. அன்ப‌ர்க‌ளே அறிமுக‌ம்
இங்கே நிறைவெய்துகிற‌து. இனி அவ‌ருட‌னான‌
காண‌லில் உட்புகுவோமா?

ஆல்ப‌ர்ட், விஸ்கான்சின், அமெரிக்கா.

_______________________________________________


த‌மிழுக்கு தொண்டு செய்ய‌ வேண்டும்
என்ற‌ ஆர்வ‌ம் த‌மிழ‌க‌த்தில் இருக்கும்போது ஏற்ப‌ட்ட‌
உண‌ர்வா? இல்லை அமெரிக்க‌ வ‌ந்த‌ பின் தோன்றிய‌தா?

அண்ணாமலைப் பல்கலைக்க கழகத்தில்
மொழியியல் ஆராய்ச்சியாளனாக இருந்தபோதே
தமிழ் ஆராய்ச்சியில் ஆர்வம் தொடங்கியது.

பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் வாஷிங்டன்
பல்கலைக் கழகத்திலும் பணிபுரிந்த போது
அங்கிருந்த நல்ல ஆராய்ச்சிச் சூழல் என்னுடைய
தமிழ் ஆர்வத்துக்கு உறுதுணையாயிருந்தது.

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கணிப்பொறி
கொண்டு தமிழ் மொழியை ஆராயும் பணியில்
ஈடுபட்ட தாங்க‌ள் ஆய்வுப்ப‌ணி குறித்து கொஞ்ச‌ம்
விப‌ர‌மாக‌ச் சொல்லுங்க‌ளேன்?

வாஷிங்டன் பல்கலைக்
கழகத்தின் மொழியியல் துறையில் வகுப்புகள்
எடுத்த போது மொழியியல் துறையின் பல்வறு
ஆராய்ச்சிகள் என்னைக் கவர்ந்தன. கணிப்பொறி
கொண்டு தமிழை ஆய்வு செய்யும் புது உத்திகளை
அங்கு கற்றுக்கொண்டேன்.

1990ஆம் ஆண்டில் தொடங்கிய இணைய
வளர்ச்சியோடு என்னுடைய மொழி
ஆராய்ச்சியையும் இணைத்துக்கொண்டேன்.
இணையத்தில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு
தமிழ் ஆராய்ச்சியாளர்களோடு எளிதாகத் தொடர்பு
கிடைத்தது.

முக்கியமாக கணிப்பொறியில் தமிழ் மொழி
அறிவை சேர்ப்பது என்ற ஆராய்ச்சியில் தொடங்கி
கணிப்பொறிக்கு மொழியறிவை புகட்டுவது என்பது
வரையிலான ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டேன்.

கணிப்பொறி கொண்டு மொழி பெயர்ப்பு தகவல்
தேடல் போன்ற ஆராய்ச்சியும் இதில் அடங்கும்.




இணையப் பக்கங்களில்


கணிப்பொறி வழி தமிழ்

மொழி கற்றுக்கொள்ளப் பாடங்களை

வடிவமைத்துள்ள‌ த‌ங்க‌ளுக்கு இத‌ன் மூல‌ம்
ப‌ய‌ன்பெற்ற‌ வெளிநாடுவாழ் த‌மிழ்மாணாக்க‌ர்க‌ள்
த‌ங்க‌ளைத் தொட‌ர்புகொண்டு ந‌ன்றி ப‌ரிமாறிக்
கொண்ட‌, உத‌வி கோரிய‌ நிக‌ழ்வுக‌ள் போன்ற‌
ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ள் த‌ங்க‌ளுக்கு வாய்த்திருக்கும்.
இதில் த‌ங்க‌ள் ம‌ன‌ம் நெகிழ்ந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள்
க‌ண்டிப்பாக‌ இருக்கும்.

அப்ப‌டிப்ப‌ட்ட‌ம‌ல‌ரும் நினைவுக‌ளை
ப‌கிர்ந்துகொள்ள‌ இய‌லுமா?





பல மாணவர்கள் அவ்வப்போது என்னுடன் தொடர்பு
கொள்வார்கள். சில உதவிகளை மின்னஞ்சல் மூலம்
செய்வேன். போலந்திலிருந்து ஒரு மாணவர் விடாமல்
இன்னும் தொடர்பு கொண்டு வருகிறார். எங்கள்
இணையப்பக்கங்களில் ஒன்று விடாமல் பயன்
படுத்திவிட்டு அங்கு கொடுத்துள்ள பயிற்சிப்
பக்கங்களைச் செய்து எனக்கு அனுப்பிக்
கொண்டே இருப்பார்.

முடிந்த போதெல்லாம் உதவி செய்வேன். ஒரு
முறை கொஞ்ச காலம் அவருக்கு மின்னஞ்சல்
கொடுக்கவில்லை. எனக்கு ஏதோ ஆகிவிட்டது
என்று என்னுடைய பேராசிரியர் ஷிப்மெனுக்கு
அஞ்சல் எழுதி வாசுவுக்கு ஏதோ ஆகிவிட்டது
போல் இருக்கிறது!


அவர் நன்றாக இருக்கிறாரா? என்று
கேட்க ஆரம்பித்துவிட்டார். எங்களது
தமிழ் இணையப்பக்கங்களுக்கு நான்
இப்படியாக உயிர் கொடுக்கவேண்டியிருக்கிறது!


இதுதான்....உங்கள் உழைப்புக்கு கிடைத்த மகுடம்!
அமெரிக்காவில் உள்ள தமிழ் குழந்தைகள் உங்கள்
தமிழ்ப் பக்கங்களைப் பயன்படுத்துவது குறித்து ஏதும்
புள்ளிவிபரம் தர இயலுமா?

புள்ளிவிவரம் ஒன்று எதுவும் இல்லை. எங்களின்
விருந்தினர் பக்கத்தில் தமிழ்ப் பக்கங்களைக்
குறித்து பலர் எழுதியுள்ளனர். பார்க்க.... http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/guest/tamilguest.html
உலகத்தின் பல நாடுகளிலிருந்தும் எங்களைத்

தொடர்புகொண்டு எப்படியெல்லாம் எங்கள்
பக்கங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று
பலர் எங்களுக்கு எழுதியுள்ளனர். எங்கள்
இணையப்பக்கங்கள் மூலம் உலகம்
முழுவதிலிருந்தும் எனக்குப் பல நண்பர்கள்
கிடைத்துள்ளார்கள்.

இது மகிழத்தக்கது. பல
மாணவர்கள் நன்றி தெரிவித்து மடல்கள்
எழுதியுள்ளனர்.


இணைய‌ம் மூல‌ம்
த‌மிழ் க‌ற்க
நீங்கள் எடுக்கும்
முயல்வுகளுக்குப் பென்சில்
வேனியா ப‌ல்க‌லை த‌குந்த‌
உத‌விக‌ளைச் செய்கிற‌தா?



இதுவரை நான் கேட்ட எதற்கும் இவர்கள் இல்லை
என்று சொன்னதில்லை.
கேட்பதற்குத்தான் நேரம் இல்லை.

இதுத‌விர‌ தமிழுக்காக‌ நீங்க‌ள் ஆற்றும் ப‌ணிக‌ள் குறித்துச் சொல்லுங்க‌ளேன்?

தமிழ் வம்சாவழி குழந்தைகளும் மாணாக்கர்களும் தமிழைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சிகள் குறித்தான பணிகள்
பலவற்றை என்னால் இயன்றவரை செய்து வருகிறேன்.

நான் வாழும் தென் ஜெர்சியில் ஒரு தமிழ்ச்சங்கத்தை
நிறுவி இங்குள்ள தமிழ்க் குழந்தைகளுக்குத்
தமிழ்ப்பள்ளி ஒன்று நடத்தி வருகிறேன். இவர்
களுக்காக ஒரு பாடப் பயிற்சி பக்கம் ஒன்று
அமைத்துள்ளேன்.
(http://rewardzone.thetamillanguage.com/ ).


டெலவர் பெருநிலத் தமிழ்சங்கத்தின் http://www.tagdv.org/)
சங்கமம் என்ற தமிழ் மலரின் ஆசிரியராக இருக்கிறேன். தமிழகச் சூழலை இங்கு ஏற்படுத்துவதே இப்பணிகளின் நோக்கம்.



எதிர்காலத் திட்டம் என்று உங்கள் எண்ண அதிர்வுகளில் இருக்கலாம். அது குறித்துச் சொல்லுங்களேன்?


தமிழைப் புது முறையில் கற்பதற்கான வழியில் அமைக்கப்பட்ட பக்கம்
http://rewardzone.thetamillanguage.com/reward_images/screenshots.html . இதை எங்கள் சமூகத்தில் உள்ள தமிழ்க் குழந்தைகள் பயன்படுத்தி வருகிறார்கள். இதை எங்கள் பல்கலைக்கழகத் தமிழ்ப்பக்கத்தோடு இணைத்து உலகெங்கும் உள்ள தமிழ் மாணவர்கள் பயன்படும்படி வடிவமைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவேன். சங்கம் முதல் இக்காலம் வரையிலான இலக்கியங்கள் மின்வடிவில் இருக்கின்ற இக்காலக்கட்டத்தில் இவற்றை முழுவதுமாகப் பயன்படுத்தி தமிழ் மொழி மற்றும்இலக்கிய வரலாறு, தமிழ்ப் பண்பாட்டின் வளர்ச்சி, தமிழர்களின் வாழ்வு முறை முதலியன பற்றி புதுக்கண்ணோட்டத்தோடு ஆய்வு செய்யவேண்டியது மிக முக்கியமான ஒன்று. இவ்வகையில் http://www.thetamillanguage.com/etext/
என்ற பக்கத்தில் தமிழ் இலக்கியங்களை வெவ்வேறு கண்ணோட்டத்தில் காண ஒரு சொற்தேடலக்கான வசதியைச் செய்துள்ளேன். தமிழ் மற்றும் தமிழ்ப் பண்பாடு வளர்ச்சி குறித்தான ஆய்வுகளில் நான் என்னை மேன்மேலும் ஈடுபடுத்திக்கொள்வேன்.

Saturday, October 20, 2007

அமெரிக்காவில் தமிழ் வளர்ச்சி - (1)




<>அமெரிக்காவில்


தமிழ் பணி :


வ.ச.பாபு<>

வ.ச.பாபு, சிகாகோவில் வசிப்பவர். ஃபெட்னா எனப்படும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க‌பேரவையில் பொறுப்புவகிப்பவர். தமிழுக்காக தொண்டாற்றுபவர். தன் நேரத்தைசெலவிடுகின்ற பேராளர்.

தங்கள் வாழ்வாதாரத்துக்காக தாய்த்தமிழகத்திலிருந்து
புலம்பெயர்ந்த தமிழர்களில் சிலர் தமிழர்கள் மத்தியில்
தமிழில் பேசுவதைத் தவிர்த்து அயல்மொழியோடு
ஆலிங்கனம் செய்துகொண்டு ஆடை களைவதைப்
போல களைந்தெறிந்து வாழும் தமிழ்க் குடும்பங்களுக்கு
மத்தியில் தமிழை வளர்க்க, நேசிக்க மழலைகளின்
அதரங்களில் தமிழைத் தவழவிட தன்னார்வ தமிழர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் ஆறுதலான விடயம்!


தமிழன் கடல் கடந்து போனாலும் தன் மொழிப்பற்றை
சிலர் கைவிட்டாலும் சிலர் தாங்கிப்பிடித்து மொழியு
ணர்வை விதைக்கும் விவசாயியாய் அமெரிக்க
மண்ணில் வலம் வருவதில் நெஞ்சு நெகிழ்கிறது!
எந்த ஒரு சமூகமும், எந்தச் சூழலிலும் "மொழி" என்ற
தன் சொந்த அடையாளத்தைத் தொலைத்துவிடக்கூடாது!
தேமதுரத் தமிழ் அமெரிக்கத் தமிழர் இல்லங்களில்,
உள்ளங்களில் வேர் பாய்ச்சி விழுதுகள் விடக்
காரணமானவர்கள் வணக்கத்திற்குரியவர்கள்!

அமெரிக்கத் தமிழர் இல்ல மழலைகள் நேசித்துச்
சுவாசிக்கத் தமிழமுதை விருந்தாக்கியளிக்கும்
தமிழன்பர்களை நாம் நன்றியோடு நினைக்கப்பட
வேண்டியவர்கள்!

வள்ளுவன் எந் நன்றிகொன்றார்க்கும் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு என்கிறதற்கொப்ப அடுத்த தலைமுறைக்கான மொழியுணர்வை வளர்த்தெடுக்கும்
இவர்களை உலகத் தமிழர்களின் பார்வைகளுக்கான
தமிழ்த்தினையில் நேர்காணல் செய்து முன்னிடுகிறேன்.


இவர்கள் தமிழை
தவமாய்,
வேதமாய்,
வேள்வியாய்,
சுவாசமாய்,
உயிராய்,
உணர்வாய் நேசித்து தமிழ் வாழ
வளர தங்களை மெழுகுவர்த்தியாய் ஆக்கிக்கொண்டுள்ள
இவர்கள் குடத்திலிட்ட விளக்காய் இருக்கிறார்கள்!
இவர்களைக் குன்றிலிடும் எளியோனின் அரிய‌ முயற்சி இது!

காலதேவனின் ஓட்டத்தில் கரைந்து மறைந்துவிடாமலிருக்க
இந்தப் பதிவுகள் காலத்தின் கட்டாயம்!

-தமிழ்த்திணைக்காக:- ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ, அமெரிக்கா.

1) தங்களைப்பற்றி ஒரு சிறு குறிப்பு:-

பிறந்தது - கொங்கு நாட்டில், கோவையில்.

வளர்ந்தது - சென்னையில்

கற்றது - பொறியியல் (கிண்டி, சென்னை, தமிழ் நாடு)
தொழில் - உற்பத்தி கருவிகள் பழுது (வருமுன் காத்து,
வருவதை கூறுவது) (Preventive and Predictive Maintenance)
புலம் பெயரக் காரணம் - தொழில் வளர்ச்சி மேம்பாடு
(தற்போது நினைப்பது அன்னை மொழிதனை
அயலார்க்கும், வழி தொடரும் தலைமுறையினருக்கும் அறிமுகப்படுத்தல் என்பதே)

2)அமெரிக்காவில் தமிழ் கற்றுக்கொடுக்க வேண்டும்
என்ற ஆர்வம் எதனால்? எப்போது ஏற்பட்டது?
ஆர்வத்துக்கு வித்திட்டது எது?

அன்பும், பாசமும் தமிழ் மொழி மீது அமையும்
ஆர்வமும், இனத்தின் மீது படியும் உணர்வும்
"ஓர் வழி" அமைவதுதான்!


அது இயற்கையுங் கூட!


வித்திட்டு வருவதை விட, பதியமிட்டு வளர்வது
என்பது பொருத்தம்!

அப்படிப் பதியமிட்டது பெற்றோரும்,
உடன் பிறந்த மூத்தோர்கள் என்றால், வளர்பருவத்திற்கு
உதவியாய் நின்றவை பள்ளிப்பருவத்து தமிழாசிரியர்களின்
தெளிந்த மொழி ஆளுமையும், பேரறிஞர் அண்ணாவின்
துள்ளுந்தமிழ் நடையுமே !


இப்போது வழிநடத்திச் செல்வது தமிழ்ப்பேரறிஞர்கள்.

(பாவாணர், பாவலரேறு) நூல்களும், தமிழ் நாட்டிலுள்ள
பல தமிழறிஞர்கள் தொடர்பும், உடன் சுமை தாங்கி
பொறுத்துச் செல்லும் துணைவியும், நண்பர்களும் தான்!

3) அமெரிக்காவில் தமிழ் பள்ளிகளைத் துவங்கி
நடத்துவதற்கு தமிழர் பெற்றோர்கள் ஒத்துழைப்பு
எப்படி யுள்ளது?

வாழ்க்கையின் வளங்கள் பல சேர்க்கும் ஆர்வத்துடன்
புலம் பெயர்ந்தோர், மொழி தாங்கி நிற்க எந்தத்
தயக்கத்தையும் காட்டுவதில்லை என்பதே
என் கருத்து!
தம் முன் உள்ள, சுமக்க இயலாத சுமைகளிடையே
அன்னை மொழி காத்து நிற்பதில் அவர்கள் காட்டும்
அக்கறை பாராட்டிற்கு உரியது.


4) தமிழ் பள்ளிகளில் ஒரே மாதிரியான தமிழ்

புத்தகங்களை தமிழகத்தில் இருந்து தருவித்து
நடத்த என்ன காரணம்?

இனமொன்று! மொழியொன்று!


ஆரம்பத்தில் இதனை வழி நடத்திச் செல்ல ஒன்றான

கல்விக்கருவிகள் துணை புரியும் என்ற எண்ணமே!

5) துவக்க நிலை மாணவர்களுக்காக ஆங்கிலம் - தமிழ் விளக்கங்களுடன் ஒரு புத்தகத்தை வடிவமைக்க
முயற்சி ஏதேனும் உண்டா?

ஆங்கிலம் - தமிழ் விளக்கம்

என்பது ஆரம்பத்தில் எளிது என்றாலும், எளியதையும்,
புதியதையும் வாழ்வாகக் கொள்ளும் வழக்கம் மனித
இயற்கை! அதிலும் தமிழர்கள் சற்றே அதிக அளவில்
இதனை மேற்கொள்பவர் என்பதாலும், செயல்
விளக்கங்களும், பொருள் காட்டு விளக்கங்களும்
மொழி கலப்பைத் தவிர்க்கும் என்ற எண்ணமும்
இந்த முயற்சியில் ஈடுபட வைக்கவில்லை.

6) அமெரிக்க தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் கற்க விசேடப் பயிற்சி ஏதும் தருகிறீர்களா?


அமெரிக்கத் தமிழ்க் குழந்தை ... : அமெரிக்க மண்ணில்
அன்றாடம் கற்பிக்கப்படும் பயிற்சி மொழியென தமிழ்
அமையும் காலம் வரும் வரை, பண்பாட்டு மொழியென்ற
வகையில் கற்பிப்பதால், சிறார்களிடையே அதிக
அழுத்தம் சேரா வண்ணம், அவர்கள் அச்சத்துடன்
மருண்டு ஓட வண்ணம் கற்பிப்பதையே முதன்மை
நோக்கமாகக் கொண்டு தற்போது பள்ளிகளை
இயக்குகிறோம்.

ஆர்வம் கூட்ட தமிழில் தட்டச்சு, மின்னஞ்சல்,
வலைப்பூக்கள் போன்ற பயிற்சி கொடுப்பதில்
ஈடுபட்டுள்ளோம்.


7) அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் குடும்பங்களில் தமிழ் கற்க விரும்பும் கல்லூரி நிலைமாணவர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் திட்டம் உண்டா?


அமெரிக்காவில் வசிக்கும் ... : ஆரம்பம், வார இறுதி
தமிழ்ப்பள்ளிகள் என்றாலும், அதிக அளவில்
தமிழ்ப்பள்ளிகள் உள்ள இடங்களில் (அமெரிக்க
உயர்நிலைப்பள்ளி மாவட்டங்களில்)
உயர்நிலைப்பள்ளிகளில்
தமிழ் ஒரு பாடம் என்பதை செயலாக்க முயற்சி
முன்னுள்ளது.

அது போன்றே தமிழில் மேற்பயிற்சி
பெற தமிழ்மண்ணில் அமைந்துள்ள கல்லூரிகளை
அணுகும் எண்ணமும் உண்டு. கல்லூரி நிலை
மாணவர்க்கு தமிழ்க்கல்வி என்ற நோக்கில்
அமைந்ததுதான் "பெர்கிலி" தமிழ் இருக்கை!

பொருளாதார வசதி என்ற கட்டுப்பாட்டில்
மற்றும் பல பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்துவது
தற்போது நிறைவேறவில்லை.

காலம் கனியும் போது இவையும் சாத்தியமே!
"தமிழ் செம்மொழி" என்ற நிலையும் இதற்கு
பெரிதும் உதவும் என்ற நம்பிக்கை
பெரிதும் உண்டு.


8) தமிழில் மேற்பயிற்சி பெற
தமிதமிழ்மண்ணில் அமைந்துள்ள
கல்லூரிகளை அணுகும் எண்ணம் உள்ளதாக
தெரிவித்தீர்கள்.
இப்போது தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
மேற்படிப்புகளை அளிக்கிறதே!
இதன்மூலம் வெளிநாடு வாழ் தமிழர்கள்
குழந்தைகள் உயர் கல்வி தமிழில் பெற உள்ள
வசதியைப் பயன்படுத்தலாமே!


நீங்கள் குறிப்பிட்டது போல் தமிழ் இணையப்
பல்கலைக்கழகம் ஒரு முக்கிய அமைப்பாகும்.
அய்யா திரு. குழந்தைசாமி அவர்களிடம் உள்ள
நேரிடைத்தொடர்பு இதற்கு ஏதுவாகலாம்.

9) முதன் முதலில் தமிழ் குழந்தைகளுக்கு தமிழைக்
கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்ட
போது முதல் பள்ளியை எங்கு துவங்கினீர்கள்? அதன்
பிறகு எப்படி? எங்கெங்கு தமிழ் பள்ளிகளை துவங்கி
இப்போது எத்தனை பள்ளிகள் நடந்துவருகிறது?


1987 சிகாகோவில் சிறார்களுக்கு மீண்டும்
(80 ஆரம்பத்தில் எடுத்த முயற்சி நிலைக்கவில்லை)
தமிழ் கற்பிக்க வேண்டுமென்ற எண்ணம் இங்குள்ள
தமிழ் ஆர்வலர்கள் திரு. இராம்மோகன், இளங்கோ,
விசுவநாதன், திருவாட்டி. கண்ணகி, கலைச்செல்வி, மீனா
ஆகியோருக்குத் தோன்றியதன் காரணமாக வடமேற்கு
பல்கலைக்கழக வளாகத்தில் நண்பர் பாலசந்தர்
உதவியுடன் முதல் தமிழ்ப்பள்ளி துவங்கியது.

இரண்டாவது தமிழ்ப்பள்ளி லகிரேஞ்சில் நண்பர் திரு.
இளங்கோவின் முயற்சியால் 1988 ஆரம்பிக்கப்பட்டது.

இப்பள்ளி பின்னர் இன்சுடேலுக்கு மாற்றப்பட்டது. பின்னர்
1996ல் டேரியனில் "உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை"
ஆதரவுடன் இயங்க ஆரம்பித்தது.
2002, 2003 ல் மாணாக்கர்

எண்ணிக்கை அதிகமாகியதலும், பெற்றோர்க்கு பயணச்சுமை குறைக்கவும் சாம்பர்க், நேப்பர்வில், மன்சுடர், கெர்ணி,
டெசுபிளெய்ன்சு, மில்வாக்கி போன்ற இடங்களில்
தமிழ்ப்பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன.

2006ல் சாம்பென்சு,புளூமிங்டனிலும் தமிழ்ப்பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டு
தற்போது ஒன்பது தமிழ்ப்பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இன்று ஒரு பதிவு செய்யப்பட்ட 501(C)(3) அமைப்பாகவே
அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள் (Thamizh Schools USA, Inc.,) இயங்கி வருகின்றது.


10) உங்கள் கருத்துக்கு ஒத்த எண்ணத்தோடு உடன் வந்தவர்கள்
குறித்து உங்களுக்குள் மலரும் நினைவுகள் இருக்கும்.
அவர்கள் குறித்துப் பகிர்ந்துகொள்ள இயலுமா?


எதனையுமே ஆரம்பிப்பது என்பது கடினம்தான்
என்றாலும், அதனை நிலையாக முன்நோக்கி
நடத்திச்செல்வது என்பது, ஒரு வேள்வி என்றே
கூறவேண்டும்.

நான்கு, ஐந்து நண்பர்கள் முன்
நின்று ஆரம்பித்து இன்று தமிழ்த்தொண்டு என்ற
எண்ணத்தில் பலரால் (கிட்டதட்ட 40 ஆசியர்களாலும், உதவியாளர்களாலும்) தொடர்ந்து நடத்தப் படுகிறது.

நினைவுகளை, நிகழ்வுகளாக மாற்றுபவர்கள் பலர்,
இதில் யாவுமே பசுமைதான்! வாழ்வில் தமிழால்
அமைவன யாவுமே பசுமைதான்!


11. இதுவரை சாதித்தது என்ன? இனி சாதிக்கப்போவது என்ன?


இதுவரையும் சாதித்தது அணுவளவு!
இனி சாதிக்க உள்ளது
காலம்தான் பதில் கூறும்.



12) தமிழ் பள்ளிகள் ஆங்காங்கே துவக்குவது தவிர மற்றபடி
தங்கள் பொதுப்பணிகளில் உள்ள ஈடுபாடு குறித்துச்
சொல்லுங்களேன்?


இந்த மண்ணில் முதல் தலைமுறையாக
காலூன்றியவர் யாவர்க்குமே பொதுப்பணிகள்
பெரும் பொறுப்பு!
இனம், மொழி, பண்பாடு,
கலை என யாவற்றிலும் நாம் நிலையாக
இந்த மண்ணில் ஊன்றிட 1986ல் ஆரம்பித்த
பணி தொடர்கின்றது, என்று முடியும், எந்த
அளவில் முடிந்தன என்பதை இனிய மூச்சு
காற்றோடு கலந்த பின் வரும் காலம் சொல்லும்.



13) இந்தப் பொதுப்பணிகளில் உங்கள் மனது மகிழ்ந்த/நிறைவான‌ சம்பவம் என்று ஒன்றைக் குறிப்பிட்டுக்கூற முடியுமா?


"தீதும் நன்றும் பிறர் தர வாரா ... இனிதென

மகிழ்ந்தன்றும் இலமே, முனிவின் இன்னாது

என்றலும் இலமே!" யாவுமே நிறைவுதான்!


14)பொதுவாக வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நீங்கள்
தெரிவிக்கும் செய்தி என்ன?


தமிழ் உணர்வு நம்மோடு உறைந்திடல் வேண்டும்.

"தமிழ் உயர தமிழால் நாம் உயர்வோம்"


15) அமெரிக்காவில் தமிழ் பள்ளி துவங்க யாரேனும் முன்வந்தால் நீங்கள் தரும் ஆலோசனை என்ன?


என்றும் எதிர் நோக்கும் உதவிகள் உண்டு.
தொடர்புகளை வரவேற்க "அன்னை இல்லம்"

annaiillam@hotmail.com
annaiillam2004@yahoo.com,
thamizhppalli2003@yahoo.com என்றுமே காத்துள்ளது.